சாத்தான்குளத்தில் போலீஸ் குவிப்பு: நாளை வாக்கு பதிவு
தூத்துக்குடி:
சாத்தான்குளத்தில் நாளை தேர்தல் நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விட்டனஎன்று துத்துக்குடி மாவட்ட கலெக்டர் தியாகராஜன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்ற தூத்துக்குடியில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
சாத்தான்குளத்தில் அமைதியாகவும், சுமூகமாகவும் தேர்தலை நடத்துவதற்கான அனைத்துப்பணிகளும் முடிவடைந்து விட்டன.
இத்தொகுதியில் மொத்தமுள்ள 173 வாக்குச் சாவடிகளில் 39 சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாகக்கண்டறியப்பட்டுள்ளன. அதனால் அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.மேலும் 48 கிராமங்களும் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவது தொடர்பாக வந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தி, தமிழகதேர்தல் கமிஷனருக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம் என்றார் தியாகராஜன்.
உடன் இருந்த திருநெல்வேலி சரக டி.ஐ.ஜியான சஞ்சீவ் குமார் கூறுகையில், சாத்தான்குளம் தொகுதிமுழுவதும் 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
பெண் வாக்காளர்கள் அதிகம்:
இந்தத் தொகுதியில் மொத்தம் 1,55,093 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 72,932 ஆண்களும்,82,161 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
தொகுதி முழுவதும் உள்ள 173 வாக்குச் சாவடிகளின் தலைமை அதிகாரிகளாக மத்திய அரசுஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த சுமார் 800ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
2 ஓட்டு எந்திரங்கள்:
மொத்தம் 25 வேட்பாளர்கள் இங்கு போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இரண்டுவாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும்.
முதல் எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்களும், மற்றதில் ஒன்பது பெயர்களும் இடம்பெற்றிருக்கும்.
வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்கு முன் தங்கள் அடையாள அட்டைகளைக் காண்பிக்க வேண்டும்.அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள 17 ஆவணங்களில் ஏதாவதுஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.
ஆனால் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) மற்றும் குடிசை மாற்று வாரியத்தின் வீடு ஒதுக்கீடுஆகியவற்றைக் காண்பித்து ஓட்டுப் போட அனுமதி இல்லை. மேலும் கடந்த டிசம்பர் 31ம் தேதிக்குப்பின்னர் தொடங்கப்பட்ட வங்கி மற்றும் தபால் சேமிப்பு கணக்கு ஆவணங்களையும் காட்டி ஓட்டுப்போட முடியாது.
2 இடங்களில் அழியாத மை:
ஓட்டுப் போடுவதற்கு வரும் வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலின் இரண்டு இடங்களில்அழியாத மை வைக்கப்படும். அந்த மை காய்ந்த பின்னரே அவர்கள் ஓட்டுப் போடும்மறைவிடத்திற்கு அனுப்பப்படுவார்கள்.
நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவிடாமல் வாக்குப்பதிவு நடைபெறும்.மாலை 5 மணிக்குள் வாக்குச் சாவடிக்கு வந்து வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் வாக்களிக்கஅனுமதிக்கப்படுவார்கள். அதன் பின் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது.
வாக்குச் சாவடி இருக்கும் இடத்திற்கு 100 மீட்டர் சுற்றளவு பகுதிகளில் தேர்தல் அலுவலகங்களோ,தேர்தல் தொடர்பான விளம்பரங்களோ, தேர்தல் ஏஜென்டுகளின் கார்களோ அனுமதிக்கப்படாது.இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
கட்சிகள் சார்பாக வாக்காளர்களுக்குத் தரப்படும் அடையாளக் கூப்பன்கள் வெள்ளை நிறத்தில்மட்டுமே இருக்க வேண்டும். வேறு நிறத்தில் இருந்தாலோ, அவற்றில் கட்சிச் சின்னம் ஏதும்அச்சிடப்பட்டிருந்தாலோ அவை வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது.
இன்னாருக்குத்தான் ஓட்டுப் போட வேண்டும் என்று வற்புறுத்துபவர்கள் மீதும், பயமுறுத்துபவர்கள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ள ஓட்டுப் போட முயல்பவர்கள் உடனடியாகப்போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
வீடியோ குழு தயார்:
சாத்தான்குளம் இடைத் தேர்தல் நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக தலைமைத் தேர்தல்கமிஷன் ஐந்து பார்வையாளர்களை நியமித்துள்ளது.
எந்த வாக்குச் சாவடியிலாவது அசம்பாவிதம் நடந்தால், அதைப் பார்வையிடச் செல்லும்பார்வையாளருடன் ஒரு வீடியோ குழுவும் சென்று சம்பவங்களைப் படம் பிடிக்கும்.
மதுக் கடைகள் மூடல்:
தேர்தலையொட்டி நேற்று மாலை 5 மணிக்கே மதுக் கடைகள் அனைத்தும் தூத்துக்குடி மாவட்டத்தில்மூடப்பட்டு விட்டன.
நாளை மாலை 5 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் 1ம் தேதியும்மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதை மீறி மதுக் கடைகளைத் திறந்து வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாளை உள்ளூர் விடுமுறை:
தேர்தல் நடைபெறும் 26ம் தேதியன்று சாத்தான்குளத்தில் உள்ளூர் பொது விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.
நாளை மாலை தேர்தல் முடிந்த பின்னர் மின் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு,தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில் பத்திரமாக வைக்கப்படும்.
அதன் பின்னர் மார்ச் 1ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அன்று பகல் 12மணிக்கு முன்பே யார் வெற்றி பெறுவார் என்பது தெரிந்து விடும்.
தொகுதியை "சீல்" வைக்க ஆணை:
சாத்தான்குளம் தொகுதியில் வந்து குவிந்துள்ள வெளியூர் நபர்களை உடனே வெளியேற்றிஅத்தொகுதி முழுவதையும் சீல் வைக்க தலைமைத் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் கடந்த ஒரு மாதமாகவே வெளியூரிலிருந்து ஏராளமான வெளியூர் நபர்களும்,ரெளடிகளும் வந்து குவிந்துள்ளனர் என்றும், அதிமுகவினர்தான் இவர்களை அழைத்து வந்துள்ளனர்என்றும் தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் கட்சி பலமுறை புகார் கொடுத்தது.
இதையடுத்து தேரதல் கமிஷன் தனது உத்தரவில்,
இந்தத் தொகுதியில் ஓட்டளிக்கும் உரிமை இல்லாத வெளி நபர்கள், குறிப்பாக அரசியல்வாதிகள்மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் அனைவரையும் உடனடியாக தொகுதியை விட்டுவெளியேற்ற வேண்டும்.
ஓட்டுப் பதிவின்போது வாக்காளர்களை ஓட்டுப் போட விடாமல் போலீசார் விரட்டுகிறார்களாஎன்பதைக் கண்டறிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


