காங்கிரசாருடன் மோதல்: அதிமுக எம்.பிக்கு அடி, உதை- அதிமுகவினரின் வேட்டி, சட்டைகள் கிழிப்பு
சாத்தான்குளம்:
கள்ள ஓட்டுப் போட ஆட்களை அழைத்துச் சென்ற அதிமுக எம்.பி. மைத்ரேயனை காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கினர். இதில் அவர்காயமடைந்தார். மேலும் பல அதிமுகவினரின் வேட்டி, சட்டைகள் கிழிக்கப்பட்டன.
இன்று சாத்தான்குளத்தில் வாக்குப் பதிவு நடந்து வரும் நிலையில் வெளியூர்காரர்கள் அனைவரும் வெளியேற தேர்தல் கமிஷன்உத்தரவிட்டது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், இளங்கோவன் உள்ளிட்டவர்களை போலீசார் வெளியேற்றினர்.
ஆனால், அதிமுக அமைச்சர்களும் எம்.பி., எம்.எல்.ஏக்களும் தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளனர். அவர்களால் அழைத்து வரப்பட்டஏராளமான அதிமுகவினரும் கள்ள ஓட்டுப் போட கொண்டு வரப்பட்ட கும்பல்களும் தொடர்ந்து அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் மணிநகர் சுந்தரகோட்டை என்ற இடத்தில் ஒரு தோப்புக்குள் கள்ள ஓட்டுப் போட வந்த அதிமுகவினர் பதுங்கியிருப்பதாகத்தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த தோப்பை காங்கிரசாரும் திமுகவினரும் மதிமுகவினரும் சுற்றி வளைத்தனர்.
அப்போது அதிமுக எம்.பியான மைத்ரேயன் (வெளியூர்காரரான இவர் தேர்தல் கமிஷன் உத்தரவை மீறி எப்படி தொடர்ந்துசாத்தான்குளத்திலேயே இருந்தார் என்று தெரியவில்லை) 4 அதிமுகவினருடன் ஒரு காரில் அங்கு வந்தார். தோப்பில் இருந்த ஆட்களைகள்ள ஓட்டுப் போட தனது காரில் அழைத்துச் செல்ல முயன்றார்.
அப்போது தோப்பை சுற்றி வளைத்து நின்ற காங்கிரஸ் தொண்டர்களைப் பார்த்து திட்ட ஆரம்பித்தார். இதனால் இரு தரப்பினருக்கும்இடையே மோதல் ஏற்பட்டது. காங்கிரஸ் தொண்டர்கள் எம்.பி. மீது பாய்ந்தனர். அவருக்கு அடி, உதை விழுந்தது. இதில் அவருக்கு லேசானகாயம் ஏற்பட்டது.
அவருடன் இருந்த அதிமுக தொண்டர்களுக்குத் தான் மிக மோசமான அடி விழுந்தது. அவர்களை காங்கிரசார் விரட்டி, விரட்டி அடித்தனர்.இதில் அவர்களது வேட்டி, சட்டைகள் கிழிந்தன. தகவல் அறிந்தவுடன் தென் மண்டல ஐ.ஜி. ராஜேந்திரன் தலைமையில் போலீசார் அங்குவிரைந்து வந்தனர்.
இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி காங்கிரசாரைக் கலைந்து போகச் செய்தனர். இந்த விஷயத்தில் காங்கிரசார் மீது போலீசார்நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுத்தால் மைத்ரேயன் சாத்தான்குளத்தில் ஏன் தொடர்ந்து தங்கினார் என்ற கேள்வியைதேர்தல் கமிஷன் எழுப்பும்.
இதனைத் தவிர்க்கவே காங்கிரசார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அனுப்பி வைத்தனர்.
பா.ஜ.கவில் இருந்து மைத்ரேயன் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அதிமுகவில் இணைந்து எம்.பியானார் என்பது நினைவுகூறத்தக்கது.


