அரசு ஊழியரின் கல்விக் கொடை
சென்னை:
அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கிடைத்த கிராஜுட்டி, சேமநல நிதி உள்ளிட்டவை அடங்கிய ரூ.10 லட்சம் பணத்தை அரசுப்பள்ளியின் வளர்ச்சிக்காக கொடுத்துள்ளார் அரசு ஊழியர் ஒருவர்.
சென்னை அரசுக் கருவூலத்துறையில் கணக்கு அதிகாரியாகப் பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றவர் முத்துக் குமாரசுவாமி.
36 ஆண்டு காலம் அரசுப் பணியில் இருந்துவிட்டு ஓய்வு பெற்றார். அவருக்கு கிராஜூட்டி, சேமநல நிதியாக ரூ. 10 லட்சம் கிடைத்தது.
இந்தப் பணத்தை பொது மக்களுக்கே தந்துவிட முடிவு செய்தார் முத்துக் குமாரசுவாமி. இதையடுத்து சென்னை குரோம்பேட்டைலட்சுமிபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியின் வளர்ச்சிக்காக இந்த நிதியை வழங்கினார்.
நிதியமைச்சர் பொன்னைனிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அவர் வழங்கினார்.
அவரை அமைச்சர் மனமாரப் பாராட்டினார். அரசு ஊழியர்களுக்கெல்லாம் மிகச் சிறந்த உதாரணமாக முத்துக் குமாரசுவாமி திகழ்வதாகபொன்னையன் கூறினார்.
இந்தப் பணத்தைக் கொண்டு லட்சுமிபுரம் பள்ளியில் நான்கு புதிய வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்படும் என்று அரசுஅறிவித்துள்ளது.


