உர விலை: நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் வெளிநடப்பு- அதிமுக பங்கேற்கவில்லை
டெல்லி:
உரம் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை உயர்வை வாபஸ் பெறக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பும் செய்தனர். ஆனால் இந்த வெளிநடப்பில்அதிமுக கலந்து கொள்ளவில்லை.
கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உரம் மற்றும் டீசல் ஆகியவற்றில் விலைகள்கடுமையாக உயர்த்தப்பட்டன. இந்த விலை உயர்வால் விவசாயிகள் கடுமையாகப்பாதிக்கப்படுவார்கள் என்றும் எனவே இவற்றின் விலைகளைக் குறைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறி வந்தன.
மத்திய அரசின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள திமுக மற்றும் தெலுங்கு தேசம் ஆகியகட்சிகளும் உரம், டீசல் விலை உயர்வைக் கடுமையாக எதிர்த்தன. ஆனாலும் இந்த விலைஉயர்வுகளைத் திரும்பப் பெற முடியாது என்று நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சிங் திட்டவட்டமாகத்தெரிவித்து விட்டார்.
இந்நிலையில் இன்று மக்களவையில் உரம் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ்உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பா.ஜ.க. உறுப்பினர்கள் பதிலுக்குக் குரல்எழுப்பினர். இதையடுத்து அவையில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
பின்னர் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சி உறுப்பினர்களும் மக்களவையிலிருந்துவெளிநடப்பு செய்தனர். திமுக, தெலுங்கு தேசம், சிவசேனா, சமதா கட்சி மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்களும் எதிர்க் கட்சிகளுக்கு ஆதரவாகக் குரல்எழுப்பினாலும் அவர்கள் வெளிநடப்பு செய்யவில்லை.
இந்நிலையில் இந்த வெளிநடப்பில் அதிமுக எம்.பிக்களும் கலந்து கொள்ளவில்லை. இதுதொடர்பாக அதிமுக எம்.பியான பி.எச். பாண்டியனிடம் கேட்டபோது,
உரம் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர்த்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கைவெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் நாங்கள் வேறு தனியாகக் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. விலைஉயர்வைக் குறைக்க எங்களாலும் மத்திய அரசை நிர்ப்பந்திக்க முடியும் என்றார்.


