அமெரிக்க படைகளுக்கு துருக்கி நாடாளுமன்றம் எதிர்ப்பு
அங்காரா:
ஈராக் மீது தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்க படைகள் தங்கள் நாட்டில் வந்து இறங்குவதைஅனுமதிக்க முடியாது என்று துருக்கி நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஈராக் மீது அமெரிக்கா எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்ற நிலையில்துருக்கியில் உள்ள படைத் தளத்தில் அமெரிக்கா ஏற்கனவே படைகளைக் குவிக்கத்தொடங்கியுள்ளது.
ஆனால் ஈராக் மீதான தாக்குதலுக்கு உலகம் முழுவதும் தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருவதால்,துருக்கியிலும் எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கின. இதையடுத்து தன் நாட்டில் அமெரிக்கப்படைகளைக் குவிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்த துருக்கிநாடாளுமன்றம் முடிவு செய்தது.
அதன்படி நடந்த வாக்கெடுப்பின் முடிவில், அமெரிக்கப் படைகளை அனுமதிக்க வகை செய்யும்மசோதாவுக்கு ஆதரவாக 250 வாக்குகளும், எதிராக 264 வாக்குகளும் கிடைத்தன.
இதையடுத்து அமெரிக்கப் போர் விமானங்கள் தங்கள் நாட்டில் தரை இறங்குவதற்கு அனுமதிஅளிக்க துருக்கி நாடாளுமன்றம் மறுத்து விட்டது. இதனால் அமெரிக்கா பெரிதும் அதிர்ச்சிஅடைந்துள்ளது.
ஈராக்கின் அருகில் உள்ள நாடு துருக்கி என்பதால் அங்கு தன் படைகளைக் குவித்து வைத்து ஈராக்மீது போர் நடத்தலாம் என்று அமெரிக்கா நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால் துருக்கிநாடாளுமன்றம் இதற்கு அனுமதிக்கவில்லை.
இதற்கிடையே ஈராக் தன்னிடமுள்ள அல்-சமெளத்-2 ரக ஏவுகணைகளை அழிக்கும் பணியைத்தொடர்ந்து மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இரண்டு ஏவுகணைகளைஅழித்த ஈராக், நேற்று மட்டும் நான்கு ஏவுகணைகளை அழித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டும் என்ற போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் இனி ஏவுகணைகளை அழிக்கப் போவதில்லை என்று ஈராக் மிரட்டியுள்ளது.
இதற்கிடையே ஈராக் அதிபர் சதாம் ஹூசைன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்என்று அரபு நாடுகள் தொடர்ந்து கோரி வருகின்றன.


