கோவில் இருந்ததா?: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை தோண்டி பார்க்க ஆணை
லக்னெள:
அயோத்தியில் ராமர் கோவிலை இடித்துவிட்டுத் தான் பாபர் மசூதி கட்டப்பட்டதா என்பதைக் கண்டறிய அந்த இடத்தைத் தோண்டிப்பார்த்து அகழ்வாராய்ச்சி நடத்துமாறு மத்திய அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்புத் தொடர்பான பிரதான வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளையில் தான் நடந்து வருகிறது.கிட்டத்தட்ட 10 வருடங்களாக நடந்து வரும் இந்த வழக்கு விசாரணையில் இப்போது தான் மிக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பன்வர் சிங், ஆலம், சுதிர் நாராயண் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச், ஒரு வாரத்துக்குள் அந்தசர்ச்சைக்குரிய இடத்தில் அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் தொடங்குமாறு மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு (Archaeological Survey of India) உத்தரவிட்டது.
நீதிபதிகளின் உத்தரவு விவரம்:
இந்த ஆய்வை முடித்த ஒரு வாரத்துக்குள் நீதிமன்றத்திடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இந்த ஆய்வுப் பணிகள் எந்தநிலையில் உள்ளன என்பது குறித்து மார்ச் 24ம் தேதி ஒரு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு கரசேவகர்களால் அங்கு நிறுவப்பட்ட (சுமார் 10 அடி பரப்பில்) ராமர் கோவிலுக்கு எந்தவிதமானசேதமும் ஏற்படாதவண்ணம் இந்த ஆய்வு நடக்க வேண்டும். (அந்தக் கோவிலில் ராமர் சிலை வைக்கப்பட்டு தினமும் வழிபாடுநடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது). அகழ்வாராய்ச்சிப் பணியினால் இந்த வழிபாட்டுக்கு எந்த இடைஞசலும் வரக் கூடாது.
இந்த ஆராய்ச்சிக்குத் தேவையான நிபுணர்களை தொல்பொருள் துறை உடனே நியமிக்க வேண்டும். அவர்கள் வேறு ஏதாவது முக்கியபணியில் இருந்தாலும் உடனே திரும்ப அழைத்து இப் பணியை ஒப்படைக்க வேண்டும். தொல்பொருள் துறையில் நிபுணர்களுக்குபற்றாக்குறை இருந்தால் மத்திய அரசு உடனே தலையிட்டு தேவையான அகழ்வாராய்ச்சி நிபுணர்களை வழங்க வேண்டும்.
மேலும் இந்த சர்ச்சைக்குரிய இடத்தை முன்பு ரேடார்கள் உள்ளிட்ட நவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு நடத்திய கனடா நாட்டுநிறுவனமான டோஜோ இன்டியா நிறுவனம் இந்த ஆய்வில் தொல்பொருள்துறைக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றியுள்ள நிலத்தை உரியவர்களிடம் (விஸ்வ ஹிந்து பரிஷத்) ஒப்படைக்கக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்தமனுவை நாளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இந் நிலையில் தான் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு வந்துள்ளது.
இந் நிலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக துணைப் பிரதமர் அத்வானி, மனித வளத்துறை அமைச்சர் முரளி மனோகர்ஜோஷி உள்பட 8 பேர் மீது தாக்கல் செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். கோப்புகளை ராய்பரேலியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்ல சி.பி.ஐக்கு லக்னெள சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனால் இந்த 8 பேரிடமும் ராய்பரேலி நீதிமன்றத்தில் வைத்து தான் விசாரணை நடக்கும்.


