கேரள சாலை விபத்தில் 3 தமிழக கூலித் தொழிலாளர்கள் பலி
ஆலுவா:
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடு ரோட்டில் படுத்துத் தூங்கிய கூலித் தொழிலாளர்கள் மீது வேன் மோதியதில் 5பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதில் 3 பேர் தமிழர்கள். மற்ற இருவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் எர்ணாகுளத்தில் உள்ள ஆலுவா என்ற இடத்தில் மாநகராட்சி மார்க்கெட்டில் கூலிகளாக வேலை பார்த்துவந்தனர். மேலும் கட்டட வேலைகளும் செய்து வந்தனர்.
நேற்றிரவு இந்த 5 பேர் உள்பட பலரும் மார்க்கெட் எதிரே நடு ரோட்டில் உள்ள சாலையைப் பிரிக்கும் தடுப்பில்படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 2.55 மணியளவில் ஒரு வேன் படுவேகத்தில் வந்து சாலைத்தடுப்பில் மோதியது.
இதில் 5 பேருமே வேன் சக்கரத்தில் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் பலியான பழனி, பச்சையப்பன் ஆகிய இருவரும் மதுரை அருகே உள்ள அழகுமலை கிராமத்தைச்சேர்ந்தவர்கள். முத்து என்பவர் கொடைக்கானலைச் சேர்ந்தவர்.
இவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த கேரள முதல்வர் ஆண்டனி இவர்களது உடல்களை சொந்தஊருக்குக் கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கையும் எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் இவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 10,000 உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
5 உயிரிகளைப் பலிவாங்கிய அந்த வேன் தமிழகத்துக்குச் சென்று கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


