சதாமுக்கு 48 மணி நேர கெடு: நாளை மறுதினம் போர்
வாஷிங்டன்:
48 மணி நேரத்துக்குள் சதாம் ஹூசேனும் அவரது குடும்பமும் நாட்டை விட்டு ஓடாவிட்டால் அமெரிக்கப் படைகள் ஈராக்கைத் தாக்கும்என அதிபர் புஷ் கெடு விதித்துள்ளார்.
இந்திய நேரப்படி நேற்றிரவு இந்த கெடுவை புஷ் விதித்தார். ஆனால், நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும் அமெரிக்கப்படைகள் உலகம் முழுவதும் எதிர்க்கப் போவதாக சதாம் ஹூசேன் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிராக வானம், கடல், தரை என எல்லா இடங்களிலும் ஈராக் படைகள் போர் தொடுக்கும் என அவர் கூறியுள்ளார்.
ஐ.நாவை மதிக்காத அமெரிக்கா:
முன்னதாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் ஈராக்கைத் தாக்க அமெரிக்கா கொண்டு வந்த இரண்டாவது தீர்மானத்தை அந்த நாடே வாபஸ்வாங்கிக் கொண்டது. இத் தீர்மானத்துக்கு போதிய ஆதரவு கிடைக்காததாலும், வீடோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை ரத்துசெய்வோம் என பிரான்ஸ் திட்டவட்டமாகக் கூறியதாலும் தீர்மானத்தை அமெரிக்கா வாபஸ் பெற்றது.
இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு இல்லாமலேயே ஈராக்கை அமெரிக்கா தாக்க உள்ளது. இதற்கு உலகம் முழுவதும் கடும்எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
புஷ் எச்சரிக்கை:
முன்னதாக அதிபர் புஷ் தொலைக்காட்சி மூலம் ஈராக்குக்கு விடுத்த எச்சரிக்கையில்,
சதாம் ஹூசேன், அவரது மகன்கள் ஆகியோர் அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் அந்தநாட்டை அமெரிக்கா தாக்கும். அமெரிக்கப் படைகளை தாக்க வேண்டாம் என ஈராக் ராணுவ வீரர்களைக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள்உயிரை வீணாக மாய்த்துக் கொள்ளாதீர்கள்.
பேரழிவு ஆயுதங்களை அமெரிக்கப் படைகளுக்கு எதிராக பயன்படுத்தாதீர்கள். எண்ணெய் கிடங்குகளுக்கு தீ வைக்காதீர்கள்.
ஐ.நா. சபை தனது வேலையை சரியாகச் செய்யாமல் தோல்வியடைந்துவிட்டது. சதாம் இருக்கும் வரை ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள்இருந்து கொண்டு தான் இருக்கும். சதாம் போனால் தான் தீவிரவாதம் ஒழியும் என்றார்.
உஷார்நிலையில் அமெரிக்கா:
ஈராக் மீது தாக்குதல் தொடங்கும்பட்சத்தில் அமெரிக்காவை அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்குவர் என்ற அச்சம் எழுந்துள்ளது.இதையடுத்து நாடு முழுவதும் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படைகள் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குபாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பாலங்கள், சுரங்கப் பாதைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஐ.நா. ஊழியர்கள் வெளியேற்றம்:
ஈராக் மீது அமெரிக்கத் தாக்குதல் உறுதியாகிவிட்டதால் அனைத்து ஐ.நா. ஊழியர்களும் அந் நாட்டை விட்டு வெளியேறுமாறு ஐ.நா.பொதுச் செயலாளர் கோபி அன்னான் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து அவர்கள் கார்கள் மூலம் குவைத்துக்கு வந்து சேர்ந்துவிட்டனர். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவது,ஆயுதக் கண்காணிப்பு போன்ற பணிகளில் ஐ.நா. ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக ஈராக்கில் இருந்து அனைத்து நாட்டுத் தூதர்கள், தூதரக ஊழியர்கள், வெளி நாட்டவர், ஐ.நா. ஊழியர்கள் வெளியேறிவிடுமாறுஅமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்தது.
இஸ்ரேல், சிரியாவில்..
இதற்கிடையே இஸ்ரேல், சிரியா, குவைத் ஆகிய ஈராக்கை சுற்றியுள்ள அமெரிக்க ஆதரவு நாடுகளும் போருக்குத் தயாராகி வருகின்றன.தங்களை ஈராக் கட்டாயம் தாக்கும் என இஸ்ரேல் கருதுகிறது.
இதனால் இந்த நாடுகளில் இருந்து அமெரிக்கத் தூதரக ஊழியர்கள் நாடு திரும்பிவிட்டனர்.
ரசாயன ஆயுத பயம்:
குவைத்தில் இருந்து தான் முதல்கட்டமாக ஈராக் மீது தாக்குதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குவைத்தில் இருந்து 120 கி.மீ.தூரத்தில் ஈராக்கின் முக்கிய நகரமான பாஸ்ரா உள்ளது.
முதலில் இந்த நகருக்குள் தான் அமெரிக்கப் படைகள் நுழையும் என்று தெரிகிறது. அதற்கு முன்னதாக பயங்கரமான விமானத் தாக்குதலும்,ஏவுகணைக் தாக்குதல்களும் நடக்கும்.
இத் தாக்குதல்களால் ஈராக் ராணுவம் நிலை குலையும்போது அமெரிக்கத் தரைப்படை நுழையும். அப்போது ஈராக் ரசாயண, உயிரியல்ஆயுதங்களால் அமெரிக்கப் படைகளைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ரசாயன ஆயுதங்களுக்கு எதிரான உடைகளுடன் அமெரிக்க வீரர்கள் ஈராக்கில் நுழைய வேண்டி இருக்கும். வெப்ப நிலை 90டிகிரி வரை உயரும் பாலைவனத்தில் இந்த உடைகளுடன் சென்று போரிடுவது தான் அமெரிக்கப் படைகளுக்கு பெரும் பிரச்சனையாகஇருக்கும்.
வானிலை தான் இந்தப் போரின் முடிவை நிர்ணயிக்கும். வெப்ப நிலை மிக அதிகமாக இருக்கும்பட்சத்தில் அமெரிக்கத் தரைபடைகள்ஈராக்கில் நுழைவது காலதாமதப்படுத்தப்படும்.
அமெரிக்காவுக்கு ஜப்பான் ஆதரவு:
இந் நிலையில் அமெரிக்கத் தாக்குதலுக்கு ஜப்பான் பிரதமர் ஜூனிசிரோ கொசுமி ஆதரவு தெரிவித்துள்ளார். உடனே சதாம் பதவி விலகிபோரைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.


