ஈராக்கை வெல்வது எளிது: அமெரிக்கா
குவைத்:
ஈராக்கை சில நாட்களில் அல்லது சில வாரங்களிலேயே பிடித்து விடுவோம் என அமெரிக்கா கூறியுள்ளது.
குவைத்தில் உள்ள அமெரிக்கப் படைகளின் கமாண்டரான லெப்டினன்ட் ஜெனரல் வில்லியம் வாலஸ் தனது படையினர் மத்தியில்உரையாடுகையில்,
ஈராக்கைத் தாக்கும் உத்தரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். சில நாட்களில், அதிகபட்சம் சில வாரங்களில் ஈராக் ராணுவத்தைமண்ணைக் கவ்வ செய்து விட முடியும்.
அமெரிக்கப் படைகளின் பயிற்சிக்கும் ஆயுதங்களுக்கும் அருகில் கூட ஈராக் வர முடியாது என்றார்.
குவைத்தில் மட்டும் 1.5 லட்சம் அமெரிக்கப் படைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஈராக்கைத் தாக்க கிட்டத்தட்ட 1,000 போர் விமானங்களை அமெரிக்கா குவித்துள்ளது. குவைத், கத்தார் ஆகிய நாடுகளிலும் விமானம்தாங்கிக் கப்பல்களிலும் இவை நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் நீர் மூழ்கிக் கப்பல்களும் சவுதி கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
அவையும் போர்க் கப்பல்களும் டாம்ஹாக் ரக ஏவுகணைகளை ஈராக் மீது செலுத்தும். முதலில் விமானப் படைத் தாக்குதல் நடக்கும்.அதைத் தொடர்ந்து பாராசூட் மூலம் கமாண்டோக்கள் ஈராக்கின் வட பகுதியில் நுழைவார்கள் என்று தெரிகிறது. அங்குள்ள குர்து இனப்படைகளுடன் சேர்ந்து அமெரிக்கப் படைகள் ஈராக்கைத் தாக்கும்.
இந்த இனத்தினரை சதாம் ஹூசேன் எதிரியாகவே பாவித்து வருகிறார். நாட்டின் வட பகுதியில் துருக்கி எல்லையில் அதிக அளவில்வசிக்கும் குர்து இன மக்களை சதாமின் படைகள் ஆயிரக்கணக்கில் கொன்று குவித்துள்ளன. இதனால் அவர்கள் அரசுக்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்போது அமெரிக்க உளவுப் பிரிவினரின் நேரடிக் கண்காணிப்பில் இந்த இன வீரர்களுக்கு போர் பயிற்சியும் தரப்பட்டு வருகிறது. வடபகுதியில் குர்து- அமெரிக்கப் படைகள் நுழையும் அதே நேரத்தில் தென் பகுதியில் குவைத் எல்லை வழியாக அமெரிக்கத் தரைப் படைஈராக்கில் நுழையும் என்று தெரிகிறது.


