கோவையில் கன மழை: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தண்டவாளம்
கோவை:
கோவை மாவட்டத்தில் நேற்றிரவு தொடர்ந்து மிக கனத்த மழை பெய்தது. இதில் ரயில் தண்டவாளம் அடித்துச்செல்லப்பட்டது. சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோவைக்குச் செல்லும் பல ரயில்களும் வழியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன.
கோவை மாவட்டம் முழுவதுமே கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. திங்கள்கிழம்ை பெய்தமழையில் சுவர் இடிந்து விழுந்து 3 நரிக்குறவர்கள் பலியாயினர்.
இந் நிலையில் நேற்றிரவும் அங்கு கனத்த மழை பெய்தது. இதில் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
திருப்பூர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக தண்டவாளங்களில் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டது.கோவை- ஈரோடு இடையே தான் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இப் பகுதியில் உள்ள பெரிய கண்மாய் பலத்த மழையால் நிறைந்து வழிந்து. மேலும் மழை பெய்ததால் கண்மாய்உடைந்து நீர் வெள்ளமாய் ஓடியது. இதில் சூலூர்- சோமனூர் இடையிலான ஒரு கி.மீ. தண்டவாளம் வெள்ளத்தில்அடித்துச் செல்லப்பட்டது.
கடும் மழை காரணமாக தண்டவாளக் கண்காணிப்புப் பணியை ரயில்வே நிர்வாகம் தீவிரமாக்கியிருந்தது.இதையடுத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர் சூலூர்- சோமனூர் இடையே தண்டவாளமேகாணாமல் போயிருந்ததைக் கண்டு திடுக்கிட்டார். மேலும் இன்னொரு தண்டவாளமும் பலத்த சேதமடைந்திருந்தது.
உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தந்தார். இதையடுத்து அந்த வழியே வந்த அனைத்து ரயில்களையும்ஆங்காங்கே நிறுத்திவிட உத்தரவிடப்பட்டது.
உடனே தண்டவாள சீரமைப்புப் பணியை கடும் மழைக்கு இடையே நள்ளிரவில் ரயில்வே அதிகாரிகள்தொடங்கினர். அடித்துச் செல்லப்பட்ட தண்டவாளத்துக்கு அருகே உள்ள அடுத்த தண்டவாளம் அதிகாலையில் சீர்செய்யப்பட்டது.
இதையடுத்து ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
பாதிக்கப்பட்ட ரயில்கள்:
வெள்ளத்தில் தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டதால் நேற்றிரவு 10.30 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்குப் புறப்பட்ட இருந்த சேரன் எக்ஸ்பிரஸ்ரத்து செய்யப்பட்டது. இன்று (புதன்கிழமை) காலை 6.20 மணிக்குத் தான் அந்த ரயில் சென்னைக்குப் புறப்பட்டது.
இன்று மாலையில் தான் இது சென்னை வந்தடையும் என்று தெரிகிறது.
நேற்றிரவு ஆலப்புழா எக்ஸ்பிரஸ், டீ கார்டன் எக்ஸ்பிரஸ், குர்லா எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டன.
அதே போல இன்று காலை புறப்பட இருந்த கோயம்புத்தூர்- ஈரோடு பாஸஞ்சர் ரயிலும் ரத்து செய்யப்பட்டுவிட்டது.


