இந்தியன் ஏர்லைன்ஸ் கட்டணம் 15 சதவீதம் உயர்வு
டெல்லி:
ஈராக் போர் காரணமாக பெட்ரோலியத்தின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துவிட்டதால் இந்தியன் ஏர்லைன்ஸ் தனது கட்டணத்தை 15சதவீதம் உயர்த்தியுள்ளது.
ஏர் இந்தியாவின் கட்டணமும் விரைவில் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.
பஹ்ரைன், தமாம் உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளுக்கு இந்தியாவின் விமான சேவை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதனால்ஏர் இந்தியாவுக்கும் இந்தியன் ஏர்லைன்சுக்கும் மாதம் ரூ. 110 கோடி நஷ்டம் ஏற்படும் என்று தெரிகிறது.
மேலும் போர் நடக்கும் இடத்தைத் தவிர்க்க 90 நிமிடம் சுற்றிக் கொண்டு வேறு பாதையில் பறக்க வேண்டியுள்ளது. இதனால் ஒருவிமானத்துக்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலான விமான எரிபொருள் வீணாவதாகவும் ஏர் இந்தியா கூறியுள்ளது.
வளைகுடாவில் இருந்து மிகக் குறைந்த கட்டணத்தில் இந்தியர்களை அழைத்து வர ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ், இந்திய விமானப்படை ஆகியவை திட்டமிட்டுள்ளன. இதனால் ஏற்படும் நஷ்டத்தை சரிகட்டவும் இந்தக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அதிரடி அறிவிப்பு:
இதற்கிடையே அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள் தனது வானில் மீது பறக்கக் கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனது வான் எல்லையில் அத்துமீறி நுழையும் எந்த விமானத்தையும் சுட்டு வீழ்த்துவோம் எனவும் கூறியுள்ளது. மேலும் தனது கடல்பகுதிக்குள்ளும் எந்தப் போர்க் கப்பலும் நுழையக் கூடாது என்று எச்சரித்துள்ளது.


