எம்.எல்.ஏவாகப் பதவி ஏற்றார் நீலமேகவர்ணம்
சென்னை:
சமீபத்தில் நடந்த சாத்தான்குளம் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த நீலமேகவர்ணம்எம்.எல்.ஏவாக இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
கடந்த மாதம் 26ம் தேதி சாத்தான்குளத்தில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டமகேந்திரனை சுமார் 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் நீலமேகவர்ணம்.
இந்நிலையில் இன்று அவர் தன்னுடைய எம்.எல்.ஏவாகப் பதவி ஏற்றுக் கொண்டார். சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நீலமேகவர்ணம் பதவி ஏற்றார்.
சபாநாயகர் காளிமுத்து அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் சிலஅதிமுக எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நாளை தொடங்கவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடர்தான் நீலமேகவர்ணம் கலந்து கொள்ளவிருக்கும் முதல்சட்டசபைக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.


