பி.ஆர்.ஓ. அலுவலகத்தை இழுத்துப் பூட்டிய நாகை கலெக்டர்
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட ஹிந்து பத்திரிக்கை நிருபர் வெங்கட சுப்ரமணியனைக் கண்டித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலரின் (பி.ஆர்.ஓ.) அறைக்கு தனி பூட்டுப் போட்டு பூட்டினார் அம்மாவட்ட கலெக்டர் சுதிர் ஜெயின்.
வெங்கட சுப்ரமணியன் அம்மாவட்டத்தில் நிலவும் சில பிரச்சினைகள் குறித்து ஹிந்து பத்திரிக்கையில் எழுதியதால் கலெக்டர் அதிருப்தியடைந்தார். அவரை இனிமேல் அரசு விழாக்களுக்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் கலெக்டர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க வந்துள்ளார் வெங்கட சுப்ரமணியன். அவரைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த சுதிர் ஜெயின், அவரை அங்கிருந்து வெளியேற்றுமாறு பி.ஆர்.ஓவுக்கு உத்தரவிட்டார்.
ஆனால் பி.ஆர்.ஓ. தயங்கினார். இதனால் ஆத்திரமடைந்த சுதிர் ஜெயின், பி.ஆர்.ஓவின் அறைக்கு தனி பூட்டுப் போட்டு பூட்ட உத்தரவிட்டார். இதையடுத்து ஏற்கனவே மூடப்பட்டிருந்த பி.ஆர்.ஓ. அலுவலகத்திற்கு மேலும் ஒரு பூட்டுப் போட்டு பூட்டப்பட்டது.
இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலெக்டரின் செயலுக்கு பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


