காஞ்சி சங்கராச்சாரியார் துறவு பூண்டதன் 50ம் ஆண்டு விழா
சென்னை:
காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் துறவறம் பூண்டு 50 ஆண்டுகள்நிறைவடைவதையொட்டி விரிவான விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பொன்விழாவின் தொடக்க நிகழ்ச்சிகள் நேற்று சென்னையில் நடைபெற்றன.
சென்னை நாரத கான சபாவில் நேற்று நடந்த பொன்விழா நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் திருநாவுக்கரசர், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழா தொடர்பான சிறப்பு தபால் உறையை திருநாவுக்கரசர் வெளியிட அதை நீதிபதிரத்தினவேல் பாண்டியன் பெற்றுக் கொண்டார். பின்னர் விழாவில் ஸ்ரீஜெயேந்திரர் பேசுகையில்,
இந்துக்கள் அனைவரும் தேவாரம், திருவாசகம் படிக்க வேண்டும். இந்த இரண்டும் அவர்களுக்குக்கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
கிறிஸ்தவர்கள் பைபிளைத் தெரியாமல் இருக்க மாட்டார்கள். முஸ்லீம்கள் திருக்குர் ஆனைத்தெரியாமல் இருக்க மாட்டார்கள். அதேபோல்தான் இந்துக்கள் வேத நூல்களைக் கற்றிருக்கவேண்டும். குழந்தைப் பருவத்திலிருந்தே வேத நூல்களைக் கற்க வேண்டும்.
இப்போதெல்லாம் பெற்றோர்கள் ஆங்கில மோகத்தில் தங்கள் குழந்தைகளை ஆங்கில மீடியத்தில்சேர்த்து விடுகிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு ஆங்கிலமும் சரியாகத் தெரிவதில்லை. தமிழும்சரியாகத் தெரிவதில்லை என்றார் காஞ்சி சங்கராச்சாரியார்.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாமண்டபத்தில் நடைபெறவுள்ளன. துணைப் பிரதமர் அத்வானி, நேபாள மன்னர் ஞானேந்திரர்,மக்களவை சபாநாயகர் மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்கள் இன்று மாலை 3.30 மணிக்குநடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.


