சஸ்பெண்ட் விவகாரம்: சட்டசபை தொடரை புறக்கணிக்கும் திமுக
சென்னை:
தமிழக சட்டசபையிலிருந்து 2 திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது நடந்துவரும் பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.
இதையடுத்து திமுக உறுப்பினர்கள் இன்று சட்டசபைக்கு வரவில்லை.
திமுக உறுப்பினரான ஜே. அன்பழகன் நேற்று சட்டசபையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். முன்னதாக கடந்தஜனவரி மாதமே மற்றொரு திமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதி சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டார்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்களின் அவசரக் கூட்டம் நேற்றுமாலை சென்னையில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்:
அன்பழகனுக்குப் பேச வாய்ப்பு தராமல் அவரை பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருப்பதுகடும் கண்டனத்திற்குரியது.
அதேபோல் பரிதி இளம்வழுதிக்கு அளிக்கப்பட்ட தண்டனையை மாற்ற வேண்டும் என்ள எதிர்க் கட்சிகள்கோரிக்கையையும் அரசு புறக்கணித்துள்ளது. இது அவர்களுடைய சர்வாதிகாரத்தையும் குறுகியமனப்பான்மையையுமே காட்டுகிறது.
பரிதி, அன்பழகன் ஆகியோர் மீதான தண்டனைகளை திரும்பப் பெறும் வகையில் இந்தக் கூட்டத் தொடர்முழுவதும் திமுக உறுப்பினர்கள் சட்டசபையைப் புறக்கணிப்பார்கள் என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
கண்டனப் பொதுக் கூட்டம்:
கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில், தமிழக அரசின் அராஜகத்தைக் கண்டித்து திமுகசார்பில் கண்டனப் பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
"சட்டசபை ஜனநாயகமும், அதிமுகவின் அராஜகமும்" என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.
வரும் 19ம் தேதி வேலூரில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும், 26ம் தேதி கோயம்புத்தூரில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்திலும் நான் கலந்து கொள்கிறேன் என்றார் கருணாநிதி.


