ஹிந்து நாளிதழ், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் மீது நடவடிக்கை: காளிமுத்து அறிவிப்பு
சென்னை:
ஹிந்து (The hindu) நாளிதழ் மீதும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியத்தின் மீதும் சபாநாயகர் காளிமுத்துஉரிமை மீறல் பிரச்சனையைக் கொண்டு வந்துள்ளார்.
இன்று சட்டமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்தவுடன் தானே இந்த விவகாரத்தை சபாநாயகர் காளிமுத்து கிளப்பினார். அவர் கூறியதாவது:
ஹிந்து நாளிதழ் முதல்வர் ஜெயலலிதாவின் புகழைக் கெடுக்கும் வகையிலும், சட்டமன்றத்தின் மாண்பைத் தாழ்த்தும் வகையிலும்செய்திகள் வெளியிட்டு வருகிறது.
கடந்த 12,13, 23ம் தேதிகளில் ஹிந்து நாளிதழ் வெளியிட்ட செய்திகள் தமிழக அரசின் புகழைக் குறைக்கும் வகையிலும் தரம் கெட்டவகையிலும் உள்ளன. 12ம் தேதி இதழில் ஹிந்து வெளியிட்ட சட்டமன்ற செய்திகளில், ஜெயலலிதா சுடு சொல்லால் திட்டினார், எதிர்க்கட்சிகளை கட்டுப்பாடில்லாமல் தாக்கினார், ஜெயலலிதா கோபத்தின் உச்சிக்கே போனார், உச்ச குரலில் ஜெயலலிதா பேசினார் போன்றவார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.
13ம் தேதி எழுதப்பட்ட கட்டுரையில் எதிர்க் கட்சிகளை ஜெயலலிதா வசை மாறிப் பொழிந்தார், ஜெயலலிதாவின் செயல்பாட்டைக் கண்டுகாங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதிர்ச்சியடைந்தனர் என்று எழுதப்பட்டுள்ளது.
இன்றைய செய்தித் தாளில் (23ம் தேதி) மார்க்சிஸ்ட்களை ஜெயலலிதா மீண்டும் மிரட்டினார், ஜெயலலிதாவின் சுடுசொல்லால் அதிர்ந்தமார்க்சிஸ்ட் எம்.எல்.ஏக்கள், டாக்டர் ராமதாசும், டாக்டர் கிருஷ்ணசாமியும் ஜாதி வெறியர்கள் என்று ஜெயலலிதா திட்டியதாகஎழுதப்பட்டுள்ளது.
இவை எல்லாம் உண்மைக்குப் புறம்பான செய்திகள். வேண்டுமென்றே திரிக்கப்பட்டு எழுதப்பட்டவை. இதனால் அந்தப் பத்திரிக்கையின்மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய உரிமை மீறல் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார் காளிமுத்து.
எஸ்.ஆர்.பி. மாட்டினார்:
அதே போல எஸ்.ஆர். பாலசுப்பிரமணியமும் தனக்கு தரப்பட்ட உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும் காளிமுத்து குற்றம்சாட்டினார். நேற்று சட்டமன்றத்தில் அவர் பேச எழுந்தபோதெல்லாம் அவரது மைக் ஆப் செய்யப்பட்டது.
இதற்கு சட்டமன்றத்தின் ஒலிபரப்பு அமைந்துள்ள உளவுப் பிரிவு போலீசார் தான் காரணம் என்று பாலசுப்பிரமணியம் குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை முதல்வர் ஜெயலலிதா மறுத்தார்.
இந்த விவகாரத்தில் அதிமுகவினருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கும் இடையே பிரச்சனை வெடித்ததால் காங்கிரசார் வெளிநடப்புசெய்தனர். அவர்கள் வெளிநடப்பு செய்தவுடன் பேசிய நிதியமைச்சர் பொன்னையன், இந்த எஸ்.ஆர்.பி. சர்வாதிகாரத்தனமாகநடக்கிறார். எல்லோரையும் மிரட்டுகிறார் என்றார்.
அதற்குப் பதிலளித்த காளிமுத்து, காலையிலேயே அவர் ஏதோ ஒரு முடிவோடு வந்திருக்க வேண்டும் என்றுநினைக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந் நிலையில் எஸ்.ஆர்.பி. மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் இந்தவிவகாரம் சட்டமன்ற உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காளிமுத்து இன்று அறிவித்தார்.
தனக்குத் தரப்பட்ட உரிமையை மீறி எஸ்.ஆர்.பி. அடிப்படையே இல்லாத மிகத் தவறான குற்றச்சாட்டை முன்வைத்தார். இதன் மூலம் அவையின் கண்ணியத்தை அவர் கெடுத்துவிட்டார். அவையின் மாண்பைக் காக்கவேண்டிய கடமை எனக்கு உண்டு என்றார் காளிமுத்து.


