சென்னை மக்களுக்கு அடுத்த வருடம் வீராணம் நீர்: ஜெ. உறுதி
சென்னை:
அடுத்த ஆண்டுக்குள் சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டுவிடும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இன்று சட்டமன்றத்தில் இது குறித்து காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை உறுப்பினரான வள்ளல்பெருமான கேள்வி எழுப்பினார். அவர்கூறுகையில்,
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். அவர்களை சட்டை செய்யாமல் அந்த ஏரிநீரை சென்னைக்குக் கொண்டு வர முயல்வது அவர்களது வாழ்க்கையோடு விளையாடுவதற்கு சமமானது.
மேலும் காவிரியில் நீர் வந்தால் தான் வீராணம் ஏரி நிறையும். மேட்டூர் நிறையாத வரை வீராணம் நிறையாது. இதனால் இத் திட்டமேசரியானதல்ல என்றார்.
அவருக்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, வடகிழக்குப் பருவ மழை பெய்தாலே வீராணம் ஏரி நிரம்பிவிடும். விவசாயிகளின் நலனைதமிழக அரசு புறக்கணிக்காது என்றார்.
அப்போது இடைமறித்த காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், சென்னைக்கு வீராணம் திட்டத்தால் நீர் வரப்போவதே இல்லை. அப்படிேயே ஏதாவது கொஞ்சம் வந்தாலும் அது சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீராக இருக்காது. மாறாகவீராணம் பகுதி விவசாயிகளின் கண்ணீராகத் தான் இருக்கும் என்றார்.
ஜெயலலிதா: ஒரு நல்ல திட்டத்தை அரசு கொண்டு வந்தால் அதை அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்க வேண்டும்.அதைவிட்டுவிட்டு சாபம் இடுவது போல பேசக் கூடாது. அப் பகுதி விவசாயிளுக்குப் போக மீதமிருக்கும் நீர் தான் சென்னைக்குக் கொண்டுவரப்படும். விவசாயிகளை கண்ணீர் சிந்த விடும் அரசு அல்ல அதிமுக அரசு என்றார்.


