மதுரை மருத்துவமனையில் வாலிபர் சாவு: டாக்டர்கள் பக்கம் தவறில்லை - கோர்ட்டில் அரசு விளக்கம்
சென்னை:
அரசு டாக்டர்கள் ஸ்டிரைக்கின்போது,மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக்கொண்டு வரப்பட்டு இறந்த வாலிபருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதாக சென்னைஉயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் சென்றபோதுவிபத்தில் சிக்கி படுகாயமடைந்த இளையராஜா என்ற வாலிபர் சிலநாட்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அப்போது அரசுடாக்டகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பல மணி நேரம் காத்திருப்புக்குப் பின் உரிய சிகிச்சைதரப்படாமல் இளையராஜா இறந்து விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவுசெய்ததது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் சதாசிவம், பிரபா ஸ்தேவன் ஆகியோர்அடங்கிய பெஞ்ச் முன்பு, அரசுத் தரப்பில் நேற்று விளக்கம் தரப்பட்டது. அதில், விபத்திற்குப் பின்வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு இளையராஜா கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு உதவிடாக்டர் ஒருவர் சிகிச்சை அளித்துள்ளார். மேல் சிகிச்சைக்கு மதுரை போகுமாறு இளையராஜாவின்உறவினர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
ஏற்கனவே தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாலும், ரத்தப் போக்கு அதிகமாக இருந்ததாலும்,கோமா நிலையில் இளையராஜா இருந்ததாலும், மதுரை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சைகொடுத்தும் கூட அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இதில் டாக்டர்கள் சரியாக சிகிச்சைதரவில்லை என்று கூற முடியாது என்று அரசு வக்கீல் முத்துக்குமாரசாமி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து வழக்கு ஒரு வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.


