அதிமுக எம்.பி, எம்.எல்.ஏவை கடத்த வீரப்பன் திட்டம்?: துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
தர்மபுரி
அ.தி.மு.கவின் ராஜ்யசபா எம்.பியான சி.பெருமாள் மற்றும் கிருஷ்ணகிரி அதிமுக எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் ஆகியோரைசந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன் கடத்தப் போவதாக டெலிபோனில் மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
எம்.பியான பெருமாள் தர்மபுரி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் உள்ளார். கிருஷ்ணகிரி பாரதி நகரில்குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று காலை 8.30 மணிக்கு பெருமாள் வீட்டிற்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. போனை பெருமாளே எடுத்துப்பேசினார். மறுமுனையில் பேசிய நபர், சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் 29 ஆட்களை உங்களை கடத்துவதற்காக அனுப்பிவைத்துள்ளான்.
எனவே நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள். எங்கு சென்றாலும் இரவில் சீக்கிரமாக வீட்டிற்கு வந்து விடுங்கள் என்றுகூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.
இதனால் மிரண்டு போன எம்.பி. உடனே மாவட்ட கலெக்டர், எஸ்.பி. ஆகியோருக்குத் தகவல் கொடுத்தார். தனதுஆதரவாளர்களையும் பாதுகாப்புக்காக வீட்டில் குவிய வைத்தார்.
மேலும் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். இதையடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் காவல்போடப்பட்டது. அவருக்கும் 24 மணி நேர துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மர்மத் தொலைபேசி மிரட்டல் குறித்து சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, சரவணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைஅமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந் நிலையில் கிருஷ்ணகிரி தொகுதி எம்.எல்.ஏவான கோவிந்தராஜ் தனக்கும் இது போன்ற மிரட்டல் வந்ததாக போலீசாரிடம்தெரிவித்தார். இதையடுத்து அவருக்கும் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
அ.தி.மு.கவின் கிருஷ்ணகிரி வடக்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ள கோவிந்தராஜின் வீடு கிருஷ்ணகிரி டேம் அருகேபெரியமுத்தூரில் உள்ளது.
2 நாட்களுக்கு முன் இந்த வீட்டுக்கும் இதே போன்ற வீரப்பன் கடத்தல் தொடர்பான மர்ம டெலிபோன் வந்துள்ளது. அதில்பேசிய நபர் வீரப்பன் உங்களை கடத்த 20 ஆட்களை அனுப்பியுள்ளான். நீங்கள் உஷாராக இருக்கவும் என்று கூறி போனைவைத்துவிட்டார்.
இதை முதலில் சாதாரணமாக எடுத்துக் கொண்டார் எம்.எல்.ஏ. ஆனால், எம்.பிக்கும் இதே மிரட்டல் வந்ததையடுத்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து அவருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இது உண்மையில் வீரப்பன் ஆட்களின் மிரட்டல் போலத் தெரியவில்லை. இந்த மாவட்ட அதிமுகவில் நிலவி வரும் கோஷ்டிப் பூசலின்வெளிப்பாடு தான் இது என்று தெரிகிறது.


