காங்கிரசுடன் கூட்டணி இல்லை: சண்டியருக்கு பாதுகாபில்லை- ஜெயலலிதா
சென்னை:
சோனியா காந்தியை முன்னிலைப்படுத்தும் வரை காங்கிரஸ் கட்சியுடன் எந்தவிதமான கூட்டணியும் வைத்துக்கொள்ள மாட்டோம் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் வரை அக்கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்துக்கொள்ளாது. வெளிநாட்டவரான ஆண்டோனியோ மெய்னோவை (சோனியா காந்தி) தலைவராகக் கொண்டுள்ளகாங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பவில்லை.
காங்கிரஸையும், பா.ஜ.கவையும் சம தூரத்தில் வைத்துள்ளோம். இரு கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. வரும்நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், அதிமுகவின் ஆதரவின்றி நிச்சயம் ஆட்சியமைக்கமுடியாது.
சண்டியருக்கு பாதுகாப்பு இல்லை:
நடிகர் கமல்ஹாசனின் சண்டியர் படத்திற்கு தனிப்பட்ட பாதுகாப்பு தர இயலாது. இதுகுறித்து மாவட்டகாவல்துறைதான் இறுதி முடிவு எடுக்கும். பொதுவாக மக்களுக்கு பாதுகாப்பு தருவது தான் போலீசாரின் வேலை.சில பிரத்யேகமான சூழலில் தனி நபருக்கு குறிப்பிட்ட காலம் வரை பாதுகாப்பு வழங்கலாம்.
தமிழ்நாட்டில் தினமும் எத்தனையோ படப் பிடிப்புகள் நடக்கின்றன. அதற்கு யாரும் இடையூறு செய்வதில்லை.சிலர் பிரச்சனைக்குரிய தலைப்பைத் தேர்ந்தெடுத்து படப்பிடிப்பு நடத்தும்போது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால்,3 மாத சூட்டிங்குக்கு பாதுகாப்பு தருவது போலீசின் பணி அல்ல. போலீசின் வேலையும் அதுவல்ல.
இந்த விஷயத்தில் மாவட்ட எஸ்.பி. தான் முடிவெடுக்க வேண்டும். தவறு நடந்தால் நான் எஸ்.பியைக் கேள்விகேட்பேன். இதனால் பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ள எஸ்.பி. தான் பாதுகாப்பு தருவதா, இல்லையாஎன்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். அதைத் தான் எஸ்.பி. செய்திருக்கிறார்.
6 கோடி மக்களுக்கு 1 லட்சம் போலீசார் தான் உள்ளனர். எனவே ஒரு சினிமா படப்பிடிப்பின் மீது போலீசார்கவனம் செலுத்த முடியாது. அவர்களுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.
என் மீது பொருளாதர வழக்கில்லை...
டெல்லியில் நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் என்னை சந்தித்ததில் தவறில்லை, இதில் எந்த மரபு மீறலும் இல்லை.நிதித்துறை தொடர்பான வழக்கு எதுவும் என் மீது நிலுவையில் இல்லை. (வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்தவழக்கு நிலுவையில் தான் உள்ளது).
கடந்த 1993-94ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கு மட்டுமே சென்னைஎழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, அதுவும் கூட முடிவடையப் போகிறது.
ஜஸ்வந்த் சிங்கிடம் நான் 30 நிமிடங்கள் பேசினேன். அந்த 30 நிமிடங்களும் தமிழக நிதி நிலை குறித்தும், மக்கள்நலத் திட்டங்கள் தொடர்பாகவும்தான் பேசினேன். ஒரு வார்த்தை கூட தனிப்பட்ட முறையில் நான் அவரிடம்எதுவும் பேசவில்லை.
தமிழகத்தின் நிதி நிர்வாகம் சிறப்பாக இருப்பதாக ஜஸ்வந்த் சிங் என்னைப் பாராட்டினார். டெல்லி பயணம் மிகுந்தசந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. அதிமுக அரசின் நிர்வாகம் சிறப்பாக இருந்ததால் தான் கேட்ட தொகையான ரூ.7,000 கோடியும் கிடைத்துள்ளது.
காவிரி...
காவிரிப் பிரச்சினை தொடர்பாக, பற்றாக்குறைக் காலத்தில் நீர்ப் பங்கீடு தொடர்பாக ஆராய உயர்மட்டக் குழுஅமைக்கப்பட வேண்டும் என்று முன்பே நாங்கள் வலியுறுத்தி வந்தோம். அதை ஏற்றுத்தான் தற்போது புதிய குழுஅமைக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டாப் பகுதியில் சுத்தமாக தண்ணீரே இல்லாத நிலையில், இந்தப் பருவ காலத்திற்கு மாற்றுப் பயிர்பயிரிடுமாறு விவசாயிகளைக் கேட்டுக் கொண்டுள்ளேன். இதில் சர்ச்சை எழுவதற்கு வாய்ப்பே இல்லை.
நான் கூறிய மாற்றுப் பயிர் இந்த பருவ காலத்திற்கு மட்டுமே. ஒன்றுமே இல்லாத நிலையில், ஓரளவாவதுவிவசாயிகளுக்கு பயன் கிடைக்கட்டுமே என்ற எண்ணத்தில் அப்படிக் கூறினேன்.
தேசிய அளவில் 3-வது அணி அமையும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தேர்தல் நெருங்கினால்தான் அது குறித்துஇறுதியாகத் தெரியவரும்.
ஆத்திரமூட்டாதீர்கள்:
அடிக்கடி நிருபர்களை சந்திக்க முடியாததற்கு சில காரணங்கள் உள்ளன. நிருபர்கள் சந்திப்பின்போது, சிலர்ஆத்திரமூட்டும் வகையில் கேள்வி எழுப்புகிறார்கள். இதனால்தான் நிருபர்கள் சந்திப்பை தவிர்த்து வந்தேன்.
மேலும், நான் ஆங்கிலத்தில் கூறும் பதில்களை தமிழ்ப் பத்திரிக்கைகள் ஒரு மாதிரியாகவும், தமிழில் கூறுவதைஆங்கிலப் பத்திரிக்கைகள் வேறு மாதிரியாகவும் வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இதை தவிர்க்கவேண்டும். இதுவும் செய்தியாளர்களை சந்திப்பதை நான் தவிர்க்க ஒரு காரணமாகும்.
எதிர்காலத்தில் நான் நிருபர்களை சந்திப்பது அவர்களது செய்திகளின் போக்கில்தான் உள்ளது.
கருணாநிதி மீது மானநஷ்ட வழக்கு:
செஞ்சி ராமச்சந்திரன் விவகாரத்தில் கைதான சென்னை ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்திக்கும் எனக்கும் நிதிவிவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கருணாநிதி கூறியுள்ளார். தவறான குற்றம் சாட்டிய அவர் மீது மான நஷ்டபோடலாமா என்று யோசித்து வருகிறேன் என்றார் ஜெயலலிதா.


