செம்மலை, நைனார், இன்பத் தமிழனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி
சென்னை:
தந்தையின் இனிஷியலை தூக்கி எறிந்த புரட்சி தனயனும், மாநில இளைஞர் நலத்ததுறை அமைச்சருமான இன்பத்தமிழன், விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல தொழில்துறை அமைச்சர் நைனார் நாகேந்திரன் ஜெயலலிதா பேரவை செயலாளராகவும், கல்விஅமைச்சர் செம்மலை, சேலம் நகர அதிமுக செயலாளராகவும், வனத்துறை அமைச்சர் வைத்தியலிங்கம், தஞ்சாவூர்தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இன்பத் தமிழனை மாவட்டச் செயலாளராக்கியதன் மூலம் இனி தாமரைக்கனியுடன் தினந்தோறும் நேரடியாகஅரசியல் மோதலில் இறங்க அவருக்கு கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா வழி வகை செய்துதந்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு தாமரைக்கனியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அவரைக் கட்சியைவிட்டுத் தூக்கிய ஜெயலலிதா, அவரை எதிர்த்து மகன் இன்பத் தமிழனை ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில்களமிறக்கினார். அன்று முதல் தனது தந்தையை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்து வருகிறார் இன்பத் தமிழன்.
தந்தைக்கு எதிராக அவர் கடுமையாக அரசியல் நடத்தி வந்ததையும், தனக்கு படு விசுவாசமாக இருப்பதையும்பார்த்த முதல்வர் ஜெயலலிதா, இன்பத் தமிழனுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார்.
இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது தந்தையின் இனிஷியலையை தூக்கி எறிந்து பரபரப்பூட்டினார் இன்பத்தமிழன்.
இதனால் குளிர்ந்து போன ஜெயலலிதா தற்போது விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியை இன்பத்தமிழனுக்குக் கொடுத்து அசத்தியுள்ளார்.
இதன் மூலம் இனி தாமரைக்கனி- இன்பத்தமிழன் அரசியல் மோதல் மாவட்டத்திற்குள் சூடு பிடிக்கும்.


