சங்கர மடத்தில் ஆடு பலியிடுவோம்: சேதுராமன் எச்சரிக்கை
சென்னை:
கோவில்களில் ஆடு, கோழிகளைப் பலியிட விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யாவிட்டால் காஞ்சி சங்கரமடத்துக்குள் புகுந்து கோழிகளையும் ஆடுகளையும் பலியிடுவோம் என மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர்டாக்டர் சேதுராமன் அறிவித்துள்ளார்.
அவரது பேட்டி விவரம்:
கோவில்களில் ஆடு, கோழி பலியிடுவது மூட நம்பிக்கை என்றால், ஆச்சார்யார்கள் யாகம் வளர்ப்பதும் மூடநம்பிக்கையே. பல்லாயிரம் பட்டுப் புழுக்களைக் கொன்று நெய்யப்பட்ட பட்டுச் சேலையை யாக நெருப்பில்போட்டு எரிப்பது மூட நம்பிக்கை இல்லையா?.
ஆடு, கோழி பலியிடுதல் என்பது தமிழக கிராமங்களின் மரபு, அது மக்களின் உணர்வோடு ஒன்றிய விஷயம்.ஏழைகளுக்கு கறி சோறு கிடைக்க உருவாக்கப்பட்ட திராவிட கலாச்சாரம். இதை எப்படி தடை செய்யலாம்.பலியிடுவதை தடை செய்யும் உத்தரவை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும். அது என் மண்ணின்மக்களுக்காக நடத்தப்படும் போராட்டம்.
இங்கு நான் மட்டுமல்ல டாக்டர் ராமதாஸ், கண்ணப்பன் என அனைத்துத் தலைவர்களுடனும் இணைந்து தான்போராடுகிறேன். எங்களுடன் இணைந்து போராட திருமாவளவனும் முன் வர வேண்டும்.
இந்தப் போராட்டம் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் இடையே ஒற்றுமை ஏற்படுத்தவும் முயன்றுவருகிறோம். பல கிராமங்களில் ஜாதியை விட்டுவிட்டு அனைத்துத் தரப்பினரும் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவுதந்து வருவது மகிழ்ச்சி தருகிறது.
வரும் அக்டோபர் 10ம் தேதி இந்தச் சட்டத்தை எதிர்த்து அற வழி போராட்டம் நடக்கும். அப்படியும் அரசு செவிசாய்க்காவிட்டால், காஞ்சி சங்கர மடத்துக்குள் நாங்களே புகுந்து பலி கொடுக்கும் போராட்டத்தை ஆரம்பித்துவைப்போம். இந்தச் சட்டம் வர அந்த மடம் தான் காரணம் என்றார் டாக்டர் சேதுராமன்.
பலி கொடுத்தால் கொலை முயற்சி வழக்கு!!
இதற்கிடையே திருச்சியில் ஆடு பலி கொடுத்தவர்கள் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்.ஆனால், அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிவிட்டது.
பலி கொடுக்க தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற அமைப்பின் சார்பில்திருச்சியில் ஆடு வெட்டிப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக போஸ்டர்களும்ஒட்டப்பட்டன.
இதையடுத்து இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். அதே நேரத்தில் திருச்சி சிந்தாமணிஅருகே உள்ள சப்பாணி கருப்பு கோவிலில் இதே இயக்கத்தைச் சேர்ந்த 9 பேர் ஆட்டைப் பலியிட்டனர். பின்னர்அந்த ஆட்டின் உடலுடன் ஊர்வலமாகச் சென்றனர்.
இதையடுத்து ராமதாஸ், கணேசன், ஆசாத், சேகர், சக்திவேல், கார்த்திக், அன்சர்தீன், சகாயராஜ், சக்திவேல் ஆகிய 9பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் ரங்கன் என்பரைக் கொலை செய்ய முயன்றதாக போலீசார்வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து இவர்கள் இன்று விசாரணைக்காக திருச்சி மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டனர். ரங்கனும் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டார்.
நீதிமன்றத்தில் அவர் சாட்சியளிக்கையில், என்னை யாரும் கொலை செய்ய முயற்சிக்கவில்லை. இந்த 9 பேர் மீதுநான் எந்தப் புகாரும் தரவில்லை. போலீசார் தான் ஒரு வெற்றுத் தாளில் என்னை மிரட்டி கையெழுத்து வாங்கினர்.நான் எந்த புகாரும் தரவில்லை என்றார்.
இதையடுத்து அந்த 9 பேரையும் நிபந்தனை ஜாமீனில் நீதிபதி விடுவிப்பதாக அறிவித்து உத்தரவைப் பிறப்பித்தார்.


