For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை பல்கலை ஆராய்ச்சி திட்ட ஊழியர்களின் கண்ணீர் கலந்த நம்பிக்கை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள ஒரு ஆராய்ச்சி மையம்.

சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இணையான மரபணுவியல் உள்ளிட்ட ஆராய்ச்சிகள் இங்கு நடக்கின்றன.

இந்தத் துறையில் பணியாற்றியுள்ள பல பேராசிரியர்கள் பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக பதவியேற்றுசிறப்பித்திருக்கிறார்கள். பலர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றியுள்ளனர்.

இந்தத் துறையின் பேராசிரியர்கள் பல ஆராய்ச்சித் திட்டங்களை வகுத்து பின்பு மத்திய மற்றும் மாநில ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும்வெளிநாட்டு ஆய்வு மையங்களில் அவற்றை சமர்ப்பித்து வருகின்றனர். சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சித் திட்டங்களுக்கு தீவிரபரிசீலனைக்குப் பின் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

இது தவிர பல்கலைக்கழக மானியக்குழு, குறிப்பாக உயிரியல் துறையின் ஆராய்ச்சிகளை மென்மேலும் மேம்படுத்த சென்ற ஆண்டு ரூ.5கோடியை இந்தத் துறைக்கு வழங்கியது.

பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறை:

இது போன்ற ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஆராய்ச்சியாளர்களுக்கு முதுகெலும்பாக விளங்குபவர்கள் இத் திட்டங்களில் பணியாற்றும்பணியாளர்கள்.

திட்டங்களில் பணியாற்ற ஆய்வுக்கூட உதவியாளர், களப்பணி உதவியாளர், ஓட்டுனர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் போன்றபதவிகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களைத் தேர்வு செய்யும் குழுவில் ஆராய்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர்,உயிரியல் துறை தலைவர், பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் தனி அலுவலர் ஆகியோர் இடம்பெறுவர்.

ஆராய்ச்சித் திட்டப் பணிகளுக்கு தேவையான கல்வித் தகுதி உடைய பணியாட்களை தேர்வு செய்வர்.

திட்டம் நிறைவு பெறும் சமயம்:

ஆராய்ச்சித் திட்டங்களின் காலம் பெரும்பாலும் மூன்றாண்டுகள் நடக்கும். மூன்றாவது ஆண்டை நெருங்கிய உடன் உயிரியல் துறைபேராசிரியர்கள் திட்டப் பணியாளர்களின் நலனுக்காகவே, மனமிறங்கி, வேறு புதிய ஆராய்ச்சித் திட்டங்களை வடிவமைத்து நிதிக்காகசமர்ப்பிப்பர். நிதி கிடைத்தவுடன் பணியாற்றிய அனைவரும் வேறொரு புதிய ஆராய்ச்சித் திட்டத்தில் தற்காலிக பணி நியமனம்செய்யப்படுவர்.

இப்படி மதுரை பல்கலைக்கழக்கத்தின் பல்வேறு திட்டங்களில் ஆய்வுக்கூட உதவியாளராகவும், களப்பணி உதவியாளராகவும்,தொழில்நுட்ப வல்லுனர்களாகவும் சுமார் 10 வருடங்கள் முதல் 21 வருடங்கள் வரை தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகின்றனர். ஆனால்,இவர்களது பணி நிரந்தரமாக்கப்படவில்லை.

பணி நியமனம்:

1997ம் ஆண்டு, 5 திட்டப் பணியாளர்கள் ஆராய்ச்சித் திட்டம் நிறைவு பெறும் தருணம் பார்த்து உயர்நீதிமன்றத்தில் பணி நிரந்தர நியமனம்செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தனர். இவர்களில் இருவருக்கும் மட்டும் பணி நிரந்தரம் செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இந்தஆணையின் விளைவாக பல்கலைக்கழக நிர்வாகம் நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னரே எஞ்சிய மூவருக்கும் சேர்த்து பணி நியமனம்செய்தது.

இவ்வாறு பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் பணி மூப்புப் பட்டியலில் மிகவும் பின் தங்கியவர்கள் எனக்கோரிஅனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டி நிர்வாகத்திடம் முறையீடும் செய்யப்பட்டது. அதற்கு நிர்வாகம் நீங்களும் வழக்குதொடருங்கள் என (தவறான) பாதையை காட்டியது.

மேலும் சுதாரித்துக் கொண்ட நிர்வாகம் இனி ஆராய்ச்சித் திட்டங்களில் 89 நாட்களுக்கு பணியாட்களை அமர்த்துவது என்றும் பின்புமுடிந்தவரை யாவரையும் பணியில் அமர்த்தக்கூடாது என்ற முடிவுக்கு வந்தது.

வழக்குகள் வலம்:

ஆகையால் எஞ்சிய அனைத்து ஆய்வுக்கூட பணியாளர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும், களப்பணியாளர்களும், ஓட்டுனர்களும்தங்களது நிலையை தக்கவைத்துக் கொள்ள கடந்த 1998ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதன் மூலம் திட்டப் பணியாளர்களை பதவியில் பதவியில் இருந்து வெளியேற்றக்கூடாது என பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு நீதிமன்றம்தடையுத்தரவு பிறப்பித்தது. ஆனால், பேராசிரியர்களின் எண்ணிக்கை குறைவால் ஆராய்ச்சித் திட்டங்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்குஆண்டு குறைந்து கொண்டே போனது.

அவ்வாறு திட்டம் நிறைவு பெற்றவுடன் பல்கலைக்கழக நிர்வாகம் உயர்நீதிமன்றத்தின் தடையுத்தரவை மதித்து திட்டப் பணியாளர்களைவெளியேற்றாமல் நாளொன்றுக்கு ரூ. 25 என சம்பளம் நிர்ணயம் செய்து அடிப்படை சம்பளம் வாங்கிய அனைவரையும் தினக்கூலிகளாக்கி மறைமுகமாக பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளியது.

சுமார் 2000 முதல் 2002 வரை ரூ. 25 எனவும் பின்பு கடந்த 2003ம் ஆண்டிலிருந்து நாளொன்றுக்கு ரூ.85 என பெருந்தன்மையுடன்வழங்கியது.

குலுக்கல் முறையில் தினக்கூலிகள்!!:

தேர்வு நேரங்களிலும், விடைத்தாள் திருத்தும் நேரங்களிலும் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பர். வேலை வேண்டும் என விரும்புபவர்கள் அனைவரும்விண்ணப்பம் எழுதி ஒரு பெட்டிக்குள் போடச்சொல்வர். குடவோலை முறைப்படி முன் அனுபவம் இல்லாத சமீபத்தில் பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் இருவரையும்தேர்ந்தெடுப்பர்.

குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கும் தினக்கூலி ரூ.60 தான். எங்களைப் போல 20 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் உள்ளவர்களுக்கும்அதே ரூ.60 தான். இதில் வேடிக்கை என்னவென்றால் தொழில்நுட்ப வல்லுனர்கள் அனைவரும் முதுகலை, கணிப்பொறி, டிப்ளமோ படித்து பட்டம்பெற்றவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.60 எனவும்,

குடவோலை முறைப்படி தேர்வு செய்யப்பட்ட கணிப்பொறி டிப்ளமோவுடன் இருந்தால் அவர்களுக்கு ரூ.100 எனவும், சிலருக்கு ரூ.120 எனவும் ஒருதலைப்பட்சமாக நிர்வாகம் நடந்து வருகிறது.

கரிசனம்:

இந்தக் கொடுமைகளையும், தங்களது துயர நிலையையும் தற்பொழுதுள்ள அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களிடமும், பதிவாளரிடமும் இந்தப் பணியாளர்கள்எடுத்துரைத்துள்ளனர். அவர்களும் இவர்களது நிலை கண்டு மன வேதனையுடன் துணைவேந்தர் நியமனத்திற்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுநம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

திட்டப் பணியாளர்கள் அனைவரும் கடந்த 10 ஆண்டுகளாக 3 துணை வேந்தர்களை (வாய்ப்பு கிடைத்தால் மட்டும்) சந்தித்து சோகக்கதையை சொல்வதும்அழுவதும் வாடிக்கையாகி விட்டது. ஒவ்வொரு துணைவேந்தரும் மனமிறங்கி பணி நிரந்தரம் செய்யவேண்டும் என எண்ணுகின்ற போது 3 ஆண்டுபதவிக்காலமே முடிவடைந்து விடுகிறது.

இந் நிலையில், வழக்கு தொடர்ந்த திட்டப் பணியாளர்கள் அனைவரையும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் பணி நிரந்தரம் செய்யச் சொல்லிஉயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

பல்கலைக்கழக பணி அமைப்புப் பிரிவின் அறிக்கைப்படி சுமார் 156க்கும் மேற்பட்ட பணிகள் நிரப்பப்படாமல் இருந்தும் பல்கலைக்கழக நிர்வாகம்நிதானமாக யோசித்துக் கொண்டிருக்கிறது.

அடிப்படைச் சம்பளம் வாங்கிய அனைத்து திட்டப்பணியாளர்களும் தினக் கூலிகளாகி நாளொன்றுக்கு ரூ. 60 பெற்று அல்லாடி வருகின்றனர். இவர்கள்அனைவரும் 40 வயதைக் கடந்தவர்கள். மேலும் இந்த வயதிற்கு பிறகு புதியதொரு வேலையை தேடுவது என்பது சாத்தியமில்லாதது.

புதிய துணைவேந்தர் மனது வைத்தால்..

சமீபத்தில் பதவியேற்ற துணைவேந்தரைப் பொறுத்துத்தான் இவர்களது துயரம் தீருமா, தொடருமா என்பது தெரிய வரும். உயர்நீதிமன்ற ஆணைமதிக்கப்படும் என்றும் கண்ணீர் கலந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறது உயிரியல் துறையில் 10, 20 வருடங்களாக வேலை பார்த்து வரும் திட்டப் பணியாளர்களின்கூட்டம்.

தற்பொழுது மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முதுநிலைக் கல்வி படித்துக் கொண்டிருக்கும் போதே மாணவர்களுக்கு பணம் ஈட்டும் கவர்ச்சிகரமானதிட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

படிக்கும் போதே பணம் ஈட்டும் திட்டத்தை நடைமுறைப்படுத்திய இந்தப் பல்கலைக்கழகம் 10 வருடங்களுக்கு மேல் கண்ணீருடன் பணியாற்றிய ஆராய்ச்சித்திட்ட பணியாளர்களை தினக் கூலிகளாக்கி, பணி நிரந்தரத்தை தள்ளிப் போடுவது ஏன் என்பது வேடிக்கையான வேதனை.

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு மனு:

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நியாயம் வழங்கக் கோரி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தமிழக ஆளுநர் பர்னாலா ஆகியோருக்குமனு அனுப்பியுள்ளனர்.

மனு அனுப்பியுள்ளவர்கள் பெயர் விவரம், பணி அனுபவம் அடைப்புக்குறிக்குள்:

ஆர்.ஜெயச்சந்திரன் ( 17 வருட பணி அனுபவம்), ஏ.தமிழ் செல்வி (17), பி.குகன் (16), கே. மனோகரன் (15), எஸ்.ராஜேந்திரன் (15), கே.பாலா (15),கே.சுந்தரமூர்த்தி (10), எஸ்.துளசிராம் (10), பி.ராஜா (10),

கே.சங்கர் (20), கே.முருகன் (20), பி.பாண்டி (19), கே.செல்வமணி (16), பி.செல்வம் (22), ஆர்.தேவதாஸ் (17), வி.நாகலிங்கம் (18), ஜி.சக்திவேல்(18), எஸ்.பழனிகுமார் (16), எம்.சுந்தரராஜ் (14), எஸ்.பாண்டி (21), ராஜசேகர் (15), அழகர்சாமி (13) ஆகியோர்.

நம்பிக்கையோடு காத்திருக்கும் இவர்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X