• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொடா நாயகனின் மெகா பிளான்!

By Staff
|

சென்னை:

மக்கள் என்னும் சக்தியைத் திரட்டி இந்த பாசிச ஆட்சியை தூக்கி எறிவேன். இது தான் சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசாரால் பொடாவில் கைது செய்யப்பட்டபோது வைகோ ஆவேசமாக இட்ட முழக்கம்.

தமிழ்நாட்டை வாழ வைக்க ஏதோ அவதாரம் எடுத்து வந்தவர் மாதிரி பேசும் ஜெயலலிதாவை அரசியலை விட்டு விரட்டுவேன்.. இது பொடா கோர்ட்டுக்கும் வேலூர் சிறைக்கும் வேனில் வந்து போன போது வைகோ பேசியது.

தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு அற்புதமான நிகழ்வு. கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை மறந்து விட்டு, அதிமுகவின் வெற்றிக்காக நாங்கள் உழைப்போம்.. போயஸ் தோட்டத்து படிக்கட்டுகளில் முதல்வர் ஜெயலலிதாவின், வழக்கத்துக்கு மாறான பயங்கர சிரிப்பு முகத்துக்கு, நடுவே பொடா நாயகன் வைகோ பேசியது.

எந்தத் தலைவரால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டாரோ, அதே தலைவருடன் கை குலுக்கி புதிய அரசியல் வரலாற்றை படைத்துள்ளார் வைகோ.

திமுகவில் இருந்தபோதும் சரி, மதிமுகவைத் தொடங்கிய பின்னரும் சரி வைகோ சந்தித்த போராட்டங்கள், களங்கள் ஏராளம். எத்தனை களம் கண்டாலும், தோல்விகள் கண்டாலும் புன்னகையுடன் நிமிர்ந்து நிற்பார் வைகோ.

ஆனால், நேற்று அவர் கூட்டணி விஷயத்தில் வெற்றி கண்டு (35 சீட்களை அள்ளி) நின்றபோது வைகோவிடம் இயல்பான புன்னகை இல்லை.

வலிய வரவழைத்துக் கொண்ட புன்முறுவலோடு பேச அவர் படாதபாடு பட்டதை பார்க்க பாவமாய் இருந்தது.

அவரது கட்சியின் கொள்கை வரிகளான லட்சியத்தில் உறுதி, பொதுவாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை என்ற வாசகம் வைகோவுக்கு முற்றிலும் பொருந்தும்.

கொண்ட கொள்கையிலிருந்து இம்மியளவும் பிசகாதவர் தான் வைகோ. ஆனால், முதல் முறையாக தனது கட்சியினருக்காக ரொம்பவே வளைந்து (கரெக்டாக சொன்னால் கூனிக் குறுகி) கொடுத்து அதிமுகவுடன் கை கோர்த்துள்ளார்.

ஸ்டாலினின் எதிர்காலத்துக்கு இடையூராக இருந்தார் என்பதற்காக வைகோவை கட்டம் கட்டி வெளியேற்றியது திமுக.

திமுக கண்ட மிகப் பெரிய பிளவுகளில் ஒன்று எம்ஜிஆர் திட்டம்போட்டு வெளியேறியது. இரண்டாவது வைகோவை வெளியேற்றியது.

ஆனால், எம்ஜிஆர் மடமடவென உச்சாணிக் கொம்புக்குப் போனது போல வைகோவால் போக முடியவில்லை.

1994ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி பிறந்தது வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். வைகோவுக்கு ஆதரவு தெரிவித்து கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட திமுக மாவட்டச் செயலாளர்கள் கட்சியிலிருந்து விலகி வைகோவுடன் இணைந்தனர்.

கட்சி ஆரம்பித்து 12 ஆண்டுகளைக் கடந்து விட்டபோதிலும், சற்றும் கட்டுக் குலையாமல், கட்டுக் கோப்புடன், வைகோ சொல்வதே வேதம் என்று ராணுவ மிடுக்குடன் நடைபோட்டுக் கொண்டிருந்தது மதிமுக.

12 ஆண்டு கால மதிமுக வரலாற்றில் 2 முறை சட்டசபை இடைத் தேர்தல், ஒரு சட்டசபை பொதுத் தேர்தல், 3 நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களை சந்தித்தள்ளது.

இதில் 1996ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனதாதளத்துடன் கூட்டணி வைத்து மதிமுக போட்டியிட்டது. அத்தேர்தலில் தோல்வியே கிடைத்தது.

1997ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன், கூட்டணி சேர்ந்தது மதிமுக. அத் தேர்தலில் அதிமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. மதிமுகவுக்கு முதன்முதலாக எம்.பிக்கள் கிடைத்தனர்.

பின்னர் 1999, 2004ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தார் வைகோ.

2 முறை மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றது மதிமுக

2004ம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவையில் மதிமுக இடம் பெறவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் வைகோவின் பொடா சிறை வாசமும், அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் அவர் செய்த பிரச்சாரமும் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பெருமளவில் உதவியது.

ஆனாலும் அந்த வெற்றிக்குப் பின் திமுகவிடம் இருந்து விலக ஆரம்பித்தார் வைகோ. அல்லது வைகோவை விட்டு திமுக விலகியது.

கூட்டணியில் இருக்கும் தலைவர் என்றாலும் கூட அவருக்கு ராமதாசுக்கு இணையான மரியாதையை திமுக தரவில்லை.

மேலும் வைகோவுடன் இருக்கும் இரண்டாம் மட்டத் தலைவர்களுக்கும் திமுகவிடம் உரிய மரியாதை கிடைக்கவில்லை.

இங்கு தான் புகுந்தது அதிமுக. சசிகலாவின் உறவினரான எல்.கணேசன் மூலமாக வைகோவை மெதுவாக வளைக்க ஆரம்பித்தனர்.

மேலும் இந்திரா காந்திக்கு பயந்து கருணாநிதிக்காக காரோட்ட யாரும் முன்வராதபோது தைரியமாய் முன்வந்து ரிஸ்க் எடுத்த அந்தக் காலத்தின் திமுக முன்னோடியான காரோட்டி கண்ணப்பனை (மதிமுக பொருளாளர்) உளவுத்துறை பொடி போட்டு வளைத்தது.

இருவரும் சேர்ந்து வைகோவை ஒரு பக்கம் பிரைன் வாஷ் செய்து கொண்டிருக்க, திமுகவின் நடவடிக்கைகளும் வைகோவை யோசிக்க வைத்தன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 17 தர, 21 இடங்களைக் கேட்டு 4 தொகுதிகளுக்காக கூட்டணியை விட்டு வெளியேறினார் வைகோ. இந்த முறையும் திமுக 22 தர, 25 கேட்டு வெளியேறியுள்ளார் வைகோ.

ஆனால், கடந்தமுறைக்கும் இந்த முறைக்கும் நிறையவே வித்தியாசம். கடந்தமுறை அதிமுகவுடன் சேராமல் தனித்துப் போட்டியிட்டார் வைகோ. காரணம், கொள்கையிலே உறுதி என்பதல் உறுதியாக இருந்தார்.

இந்த முறை தொகுதியிலே உறுதி என்ற அளவுக்கு அரசியலில் பக்குவம் அடைந்துவிட்டார் வைகோ. தொகுதி தான் முக்கியம் கொள்கை எல்லாம் சும்மா என்று ஆவரேஜ் அரசியல்வாதிகள் மாதிரி வைகோவும் நேற்று பேசியதைப் பார்த்து அவரை உள்ளப்பூர்வமாக ஆதரிக்கும் தொண்டர்கள் கூட மிரண்டு தான் போயிருப்பார்கள்.

கடந்த தேர்தலில் குட்டிக் கட்சிகளை திரட்டிக் கொண்டு தனித்துப் போட்டியிட்ட மதிமுக பிரித்த வாக்குளால் தான் பெரும்பாலான தொகுதிகளில் திமுக தோல்வி கண்டது. அந்தப் படிப்பினையை திமுக இவ்வளவு வேகத்தில் மறந்துவிட்டது கொடுமை தான்.

ஆனால், இப்போது அதிமுகவுடன் அணி சேர்ந்துள்ள வைகோவிடம் நீண்ட கால பிளான்கள் இருப்பது தெரிகிறது. அதிமுக ஜெயித்து ஆட்சியமைத்தாலும் இல்லாவிட்டாலும் இந்தக் கூட்டணியில் வைகோ நீண்டகாலம் நீடிக்க மாட்டார்.

இத்தனை ஆண்டுகள் கட்சி நடத்தியும் சட்டசபையில் ஒரு மதிமுக கூட இல்லை. முதலில் அந்தக் குறையைப் போக்க யாருடனாவது கூட்டணி அமைத்தே ஆக வேண்டிய நிலை வைகோவுக்கு.

தனித்து நின்றால் மீண்டும் அது அதிமுகவுக்கே உதவும், ஆனால், மதிமுகவுக்கு அதனால் ஒரு பலனும் இல்லை.

முதலில் சட்டமன்றத்தில் புக வேண்டும், அதுவும் அதிக எண்ணிக்கையில்.

அடுத்ததாக வைகோ எதிர்பார்ப்பது, மிக விரைவில் ஸ்டாலினுக்கு திமுக பட்டாபிசேகம் சூட்டப் போகிறது. திமுக வென்றால் கருணாநிதி பேருக்கு சில மாதங்கள் முதல்வராக இருந்துவிட்டு ஸ்டாலினை அந்தப் பதவியில் அமர்த்துவார் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு உள்ளது.

அப்படிப்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் மதிமுக இருக்க முடியாது. ஸ்டாலினை எதிர்த்து அரசியல் களத்தில் நிற்க வேண்டும்.

வைகோ நம்ம கூட இருந்தா அவருக்கு நல்லது.. அதிமுகவுக்கு போய்ட்டா நமக்கு நல்லது என்றாராம் கருணாநிதி சமீபத்தில் தனது கட்சியின் நிர்வாகிகளிடம்.

இதன்மூலம் ஸ்டாலினுக்கு எதிரான ஒரு தலைவரை கூட்டணியில் வைத்திருக்க திமுக விரும்பவில்லை என்பது உறுதியாகிறது. ஆனாலும் ஆட்சியைப் பிடிக்க மதிமுகவின் ஆதரவு வேண்டும் என்பதால் வேண்டா வெறுப்பாக இடம் தந்தது திமுக.

கருணாநிதி விலகிக் கொண்டு ஸ்டாலினை முதல்வராக்கினால் ஜெயலலிதா-ஸ்டாலின் என்று அடுத்தகட்ட பைட்டுக்கு தமிழகம் தயாராகும் என்பதை கணக்கிட்டார் வைகோ. அப்போதும் தூர நின்று கொண்டு இவர்களது சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் சரி வராது என்பதால் அந்த பைட் ஸ்டாலின்-ஜெயலலிதா-வைகோ என்ற மும்முனைப் போட்டியாக வேண்டும் என்று கருதுகிறார் வைகோ.

அதற்கு முதல் கட்டமாக சட்டசபையில் பெரிய எண்ணிக்கையில் நுழைய வேண்டும். தங்களது பிரசன்ஸை தமிழகத்தில் அழுத்தமாக உணர்த்த வேண்டும்.

அடுத்து அதிமுக, திமுக என எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் தனியாக வேண்டும். ஜெயலலிதா-ஸ்டாலின்-வைகோ என்ற மூன்று துருவ போட்டியை உருவாக்க வேண்டும் என்பதே வைகோவின் திட்டம்.

அதற்கு முதலில் திமுகவிடம் இருந்து விலகுவது, அதிமுகவிடம் அதிகமான சீட்களை பெறுவது, முடிந்த வரை தொகுதிகளில் வென்று சட்டசபைக்குள் நுழைவது, அடுத்து யாரிடமும் இல்லாமல் பிரிவது.

தேர்தல் முடிந்த கையோடு வைகோவும் பிரிந்து போய்விடுவார் என்பது ஜெயலலிதாவுக்கும் தெரியும். ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளில் அதிமுகவின் ஓட்டு வங்கியில் விழுந்துள்ள ஓட்டை மிகப் பெரியது என்பதை உளவுத்துறையின் பல சர்வேக்கள் தெளிவாக்கிவிட்டதால், திமுக தவிர எல்லா கட்சிகளுக்கும் வலை வீசி வருகிறார் ஜெயலலிதா.

அதிமுக இழந்த ஓட்டுக்களை பிற கட்சிகளை உள்ளே கொண்டு வந்து தான் ஈடு செய்ய முடியும். அதற்காக ஜெயலலிதா கதவைத் திறந்து காத்திருக்க, தனது எதிர்கால பிளானுக்கும் இந்தத் திட்டம் பொறுத்தமாகவே இருப்பதை உணர்ந்த வைகோ, போயஸ் கார்டனுக்குள் அடி எடுத்து வைத்துள்ளார்.

மேலும் எல்.ஜி உள்பட பல மூலம் வைகோவை அதிமுக கெஞ்சிய கெஞ்சல் இருக்கிறதே அது கொஞ்ச நஞ்ச கெஞ்சல் அல்ல. வேணா.. அழுதுருவேன்.. என்று வடிவேலு ரேஞ்சுக்கான அதிமுகவின் சரண்டர் அது.

இதனால் தான் 27 சீட் தருகிறோம் என்று சொன்ன ஜெயலலிதாவை 35 சீட்டுக்கு ஒப்புக் கொள்ள வைக்க வைகோவால் முடிந்தது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜகவுக்கே கூட்டணியில் சொற்ப சீட்களைத் தந்ததோடு, அக் கட்சியின் கேண்டிடேட்ஸையும் முடிவு செய்தராயிற்றே ஜெயலலிதா. அதுவும் அடுத்து வாஜ்பாய் தான் பிரதமர் என்று நாட்டின் எல்லா பத்திரிக்கைகளும் சைரன் அடித்துக் கொண்டிருந்த காலத்தில் நடந்த கதை அது.

அப்படிப்பட்ட ஜெயலலிதாவிடமே 45 சீட்களை கேட்டு பேரம் பேசி, கொஞ்சம் விட்டுத் தந்து, நிறையே பிடிவாதம் பிடித்து 35 இடங்களை வாங்கிவிட்டார் வைகோ.

இதனால் தனது கட்சியில் இதுவரை எந்தப் பதவியையும் ருசித்திராத மாவட்டச் செயலாளர்களுக்கும் முன்னணித் தலைவர்களுக்கும் சீட் தந்துவிட வைகோவால் முடியும்.

மேலும் அதிமுக கூட்டணி இருப்பதால் மதிமுக வேட்பாளர்களுக்கு பெரிய நிதிப் பிரச்சனையும் எழாது. அதையெல்லாம் அதிமுக பார்த்துக் கொள்ளும்.

இப்படியாக தட்டில் பழம் வைத்து வைகோவிடம் தந்திருக்கிறது அதிமுக.

ஆனால், தன்னை சிறையில் அடைத்து அழகு பார்த்த ஜெயலலிதாவுடன் வைகோ பிரசாரத்திற்குப் போக வேண்டும், ஒரே மேடை ஏற வேண்டும், நேற்று போயஸ் தோட்டத்தில் சிரித்தாரே அதே செயற்கையான சிரிப்போடு...

திமுகவின் அய்யோ போயிட்டாரே கூட்டணி, அதிமுகவின் விடாதே பிடி கூட்டணி.. இதையெல்லாம் பார்த்து பொது ஜனங்களும், சிரிக்கிறார்கள். ஆனால், அது ஒரிஜினல் சிரிப்பு

மக்கள் சிரித்தால் என்னவாகும் என்பது அரசியல்வாதிகளுக்குத் தெரியாதா என்ன?

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X