• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த வழக்கையும் சந்திக்கத் தயார்: ஜெ.

By Staff
|

சென்னை:

திமுக அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையையும் சந்திக்கத் தயார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலின்போது ஜெயலலிதாவும் அதிமுக கூட்டணியினரும் திட்டமிட்டு வன்முறையை ஏற்படுத்தினர். வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் ஜெயலலிதா மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதற்கு ஜெயலலிதா இன்று பதில் அளித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வன்முறையை யார் தூண்டியது, யார் நடத்தியது என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.

இந்திய அரசியல் வரலாற்றிலேயே இதுபோல ஒரு அராஜகம், வன்முறை நடந்ததில்லை. இதுபோன்ற வன்முறையான, தன்னிச்சையான அரசை தூக்கி எறியப் போகும் சந்தர்ப்பத்திற்காக மக்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

இன்று 2வது கட்ட வாக்குப் பதிவிலும் கூட திமுக குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மறு வாக்குப் பதிவு நடைபெறும் வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டுப் போடுகிறார்கள்.

திருவொற்றியூரில், வாக்குச் சாவடியைக் கைப்பற்றிய, கள்ள ஓட்டுப் போட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இத்தனையும் மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் முன்னிலையில் நடந்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 155 வார்டுகளுக்கும் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும். வெள்ளிக்கிழமை நடந்தது வாக்குப் பதிவே அல்ல, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய சம்பவம் அது.

2001ல் நடந்த தேர்தலில் அதிமுக வன்முறை, முறைகேடுகளில் ஈடுபட்டதாக கருணாநிதி கூறியிருப்பது பொய். அப்படி நடந்திருந்தால் மு.க.ஸ்டாலின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? எங்களது வேட்பாளர்தானே மேயராகியிருக்க முடியும்?திமுகவின் பெயர் கெட்டு விட்டது, திமுக அரசின் முகத் திரை கிழிந்து விட்டது. எனவே மக்களை திசை திருப்ப இதுபோல அவதூறான செய்திகளை கருணாநிதி பரப்புவதை நிறுத்த வேண்டும்.

வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்தைப் பார்க்கும்போது எதிர்காலத்தில் திமுகவுக்கு நல்ல பெயர் கிடைக்க வாய்ப்பே இல்லை என்பது போல அக்கட்சியினர் நடந்து கொண்டுள்ளனர். கருணாநிதி என்னதான் முயன்றாலும் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவப்பெயரை துடைக்கவே முடியாது.

திமுகவினருடன் சேர்ந்து கொண்டு காவல்துறையினரும் குண்டர்களாக மாறி, ரெளடிகளாக அட்டகாசம் செய்து, அனைத்து வகையான முறைகேடுகளிலும் ஈடுபட்டுள்ளனர்.அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தவறு செய்த அத்தனை ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதாவது சிபிஎம், சிபிஐ ஆகியவை திமுகவினரின் போக்கால் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. எதிர்காலத்தில் திமுக கூட்டணி சிதறப் போவது நிச்சயம். அரசியல் அரங்கில் அணி மாற்றம் ஏற்படப் போவதை தவிர்க்க முடியாது. அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. இதுகுறித்து விரிவாகப் பேசவும் நான் தயார்.

தமிழகத்தை ஆளும் உரிமையை கருணாநிதி இழந்து விட்டார். மத்திய அரசோ அல்லது ஆளுநரோ உடனடியாக தலையிட்டு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இருவருமே கருணாநிதியின் கைகளில் பொம்மைகளாக உள்ளனர்.

கடவுள்தான் தமிழகத்தையும், தமிழக மக்களையும் காக்க வேண்டும். விரைவில் தமிழகத்தில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னர் கவுன்சிலர்கள் கட்சி மாறுவதைத் தடுக்க கட்சி தாவல் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம் என்றார் ஜெயலலிதா.

முன்னதாக வெள்ளிக்கிழமை நடந்த மோதலில் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சுலோச்சனா சம்பத், சேகர்பாபு, கலைராஜன் ஆகியோரை ஜெயலலிதா நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.

மேலும், தனது வார்டில் மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த அதிமுக பெண் வேட்பாளர் வசந்தா தவமணியின் உண்ணாவிரதத்தையும் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X