உலகக் கோப்பை கிரிக்கெட்: இன்று முதல் மோதல்வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் சந்திப்பு
கிங்ஸ்டன் (ஜமைக்கா):ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் இன்று உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம்பாகிஸ்தானுக்கும், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கும் இடையே நடைபெறுகிறது.
9வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேற்று கோலாகலமாகநடைபெற்றது. இன்று முதல் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தானும்,மேற்கு இந்தியத் தீவுகளும் சந்திக்கின்றன.
இரு அணிகளும் டி பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
முதல் இரு உலகக் கோப்பைகளை வென்ற அணி மேற்கு இந்தியத் தீவுகள். பாகிஸ்தான் ஒரு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது.இம்ரான்கான் தலைமையில் 1999ம் ஆண்டு உலகக் கோப்பையை பாகிஸ்தான் வென்றது.
இரு அணிகளும் அபாரமான வீரர்கள் இடம் பெற்றுள்ளதால் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 1983ம் ஆண்டுக்குப் பின்னர்மேற்கு இந்தியத் தீவுகள் அணி பல சரிவுகளை சந்தித்தது. லாராவின் தலைமைக்குப் பின்னர்அந்த அணி பல தோல்விகளை சந்தித்துள்ள போதிலும் சமீப காலமாக மீண்டும் விறுவிறுப்பாக விளையாடி வருகிறது.
பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவிடம் படு தோல்வியை சந்தித்த போதிலும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி தெம்பாக களம்காண்கிறது.
கேப்டன் லாரா, சந்தர்பால், சர்வான், சாமுவேல்ஸ், கிறிஸ் கெய்ல் ஆகிய சிறந்த பேட்ஸ்மென்களும், டெய்லர், பிரேவோ, பாவல், பிராட்ஷா ஆகியபந்துவீச்சாளர்களும் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
அதேபோல பாகிஸ்தான் அணியும் முழு பலத்துடன் களம் இறங்குகிறது. இன்சமாம் உல் ஹக், யூனிஸ்கான், முகமமது யூசுப், முகம்மது ஹபீஸ் எனபேட்டிங் வரிசையும், ஷாகித் அப்ரிடி ரூபத்தில் அட்டகாசமான ஆல் ரவுண்டரும், முகம்மது சமி, சோயிப் மாலிக், கனேரியா ஆகிய சிறந்தபந்துவீச்சாளர்கள் என பாகிஸ்தான் அணியும் வலுவாகவே உள்ளது.
இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் போட்டி படு விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. முதல் போட்டியில் வெற்றிக்கனியை சுவைக்கப் போவது யார் என்ற பந்தயம் ரசிகர்களிடையே படு வேகமாக நடந்துவருகிறது.
டி பிரிவில் இந்த இரு அணிகள் மட்டுமே பலமானவை. எனவே இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும்வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இன்று இரவு 8 மணிக்குத் தொடங்கும் போட்டியை தூர்தர்ஷன் மற்றும் செட்மேக்ஸ் ஆகிய சானல்களில் கண்டு ரசிக்கலாம்.
இரு அணி வீரர்கள் விவரம்:
மேற்கு இந்தியத் தீவுகள்:பிரையன் லாரா (கேப்டன்), ஷிவ்நரேன் சந்தர்பால், கிறிஸ் கெய்ல், ராம் நரேஷ் சர்வான், மர்லான் சாமுவேல்ஸ், கோரி கோலிமூர், டிவைன்பிரேவோ, இயான் பிராட்ஷா, டிவைன் ஸ்மித், ஜெரோம் டெய்லர், திணேஷ் ராம்தின்(விக்கெட் கீப்பர்), டேரன் பாவல், டிவோன் ஸ்மித், லெண்டில் சிம்மன்ஸ், கியான் போலர்ட் .
பாகிஸ்தான்:
இன்சமாம் உல் ஹக் (கேப்டன்), சோயிப் மாலிக், முகம்மது யூசுப், யூனிஸ்கான், அசார் முகம்மது, இப்திகர் அஞ்சும், இம்ரான் நசீர், கம்ரன் அக்மல்(விக்கெட் கீப்பர்), டேனிஷ் கனேரியா, முகம்மது ஹபீஸ், யாசர் அராபத், அப்ரிடி,முகம்மது சமி, உமர் கல், நவேத் உல் ஹசன்.
இரு அணிகளும் இதுவரை ...
விளையாடிய போட்டிகள்: 109.வெற்றி: மே.இ. தீவுகள் - 63, பாகிஸ்தான் - 44.
டை: 2.
உலகக் கோப்பையில் இதுவரை ...
சந்தித்தவை: 7.வெற்றி: மே.இ. தீவுகள் -5, பாகிஸ்தான் - 2.
கடைசியாக சந்தித்த 10 போட்டிகளில் பாகிஸ்தான் 8 போட்டிகளிலும், மேற்கு இந்தியத் தீவுகள் 2 போட்டிகளிலும் வென்றுள்ளன.












Click it and Unblock the Notifications