கிட்டங்கி எரிந்து 200 டன் மரம் நாசம்
சென்னை:மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் வைக்கப்பட்டிருந்த மரக் கிட்டங்கியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 200 டன் மரக் கட்டைகள் எரிந்து சாம்பலாயின.
சென்னை அம்பத்தூரில் சாகுல் அமீது என்பவரின் பெரிய மரக் கிட்டங்கி உள்ளது. இதில் 200 டன் மரக் கட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று விடுமுறை என்பதால் கிட்டங்கி மூடப்பட்டிருந்தது.
அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு கிட்டங்கி பற்றி எரிந்தது. காற்றும் பலமாக வீசியதால் தீ வேகமாக பரவியது. இதனால் அருகில் குடியிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
அம்பத்தூர் பகுதியிலிருந்து சுமார் 10 வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நகராட்சி குடிநீர் லாரிகளும் இதில் ஈடுபடுத்தப்பட்டன.
3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் பக்கத்திலுள்ள 15 தென்னை மரங்களும் தீயில் கருகின. அருகிலுள்ள வீடுகளில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. உயிர் சேதம் ஏதுமில்லை.
அணைக்கப்படாத சிகரெட் அல்லது மின் கசிவினால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications