திருட்டு கும்பலை துப்பாக்கியுடன் துரத்திய இணை கமிஷ்னர் ரவி: பெண் பிடிபட்டார்
சென்னை:நகை பாலீஷ் போடுவதாக கூறி நகைகளைத் திருடிய கும்பலை போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் வட சென்னை போலீஸ் இணை கமிஷ்னர் ரவி துப்பாக்கியுடன் துரத்தினார். இதில் கும்பலைச் சேர்ந்த ஒருவரின் காதலி மட்டும் பிடிபட்டார்.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அணுகி, நகைகளுக்குப் பாலீஸ் போடுவதாகவும், முலாம் போடுவதாகவும் கூறி ஒரு கும்பல் நகைகளைத் திருடி வருவதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், வட சென்னை காவல்துறை இணை ஆணையர் ரவிக்கு, நகை பாலீஷ் மோசடிக் கும்பல் குறித்த தகவல் கிடைத்தது.
அந்தக் கும்பல் பாடி பகுதியில் தங்கியிருப்பதாக கிடைத்தத் தகவலைத் தொடர்ந்து அங்கு ரவி விரைந்தார். போலீஸாரைப் பார்த்ததும் நகை மோசடிக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
ஆனால் விடாத ரவி, கையில் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அந்தக் கும்பலைத் துரத்தினார். போக்குவரத்து நெரிசல் மிக்க எம்.டி.எச். சாலையில் கையில் துப்பாக்கியுடன் இணை கமிஷ்னர் ரவி ஓடி வருவதைப் பார்த்து அப்பகுதியில் சென்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
முதலில் சினிமா ஷூட்டிங் என அவர்கள் நினைத்தனர். ஆனால், கொள்ளைக் கும்பலைத் துரத்திச் செல்கிறார்கள் என்பதை அறிந்ததும் போலீஸாருக்கு வழி விட்டு விட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர்.
ரவியின் துரத்தலில் ஒரு பெண் மட்டும் சிக்கினார். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். அந்தப் பெண்ணிடம் ரவி விசாரணை நடத்தியதில் அவரது பெயர் ராதாபாய் என்று தெரிய வந்தது. இவர் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ராம் மோகன் சர்மா என்பவரின் காதலி ஆவார்.
இந்தக் கும்பல் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்ததாகும். கும்பலில் மொத்தம் 6 பேர் உள்ளனராம். இந்தக் கும்பலுக்கு ஒரு பெண்தான் தலைவராம். அவர்தான் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளைத் திட்டத்தை வகுத்துக் கொடுப்பார்.
பின்னர் கும்பலில் உள்ளவர்களுக்குத் தகவல் கொடுத்து அவர்களை அனுப்பி வைப்பார். அவர்களுக்கு ராதாபாய் தேவையான உதவிகளைச் செய்து வருவாராம்.
தப்பி ஓடி விட்ட 6 பேரையும் பிடிக்க போலீஸார் தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
சினிமா பாணியில் காவல்துறை உயர் அதிகாரி கையில் துப்பாக்கியில் நடு ரோட்டில் கொள்ளைக் கும்பலை விரட்டிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பான பேச்சாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications