For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமதாசுடன் பணிவுடன் மோதும் பொன்முடி!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளைப் பொறுத்தவரை ஏஐசிடிஇ, எம்சிஐ, டிசிஐ ஆகியவற்றால் தான் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியும். அதனால்தான் இந்த அமைப்புகளுக்கு முன்னால் போராட்டம் நடத்த வேண்டும் என கூறினேன். இதிலென்ன விதண்டாவாதம் இருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாசுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதுரையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம், தமிழகத்தில் உயர் கல்வித்துறை இருக்கிறதா, செயல்படுகிறதா என சந்தேகமான கேள்வி ஒன்றினை எழுப்பியிருந்தார்.

கடந்த 29ம் தேதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஓராண்டில் உயர்கல்வித்துறை செய்த சாதனைகள் விளக்கமாக கூறியிருந்தேன்.

ராமதாஸ் ஒப்புக் கொண்டபடி, தொழிற்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையில் நுழைவு தேர்வை ரத்து செய்து சாதனை படைத்தது முதல்வர் கருணாநிதி அரசு என்பதை சுட்டிக்காட்டி சாதனைகளை பட்டியலிட்டிருந்தேன்.

தனியார் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் கட்டாய நன்கொடை மற்றும் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்தும் சில கருத்துகளை கூறியிருந்தேன்.

சென்னை சுற்றியுள்ள சில கல்லூரிகளில் கட்டாய நன்கொடை வசூலிப்பதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கு ஆதாரப்பூர்வமான புகார்கள் பெற்றோர்களிடமிருந்தோ, மாணவர்களிடமிருந்தோ வரவில்லை.

இதனால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் சில இடர்பாடுகள் உள்ளன எனவும் கூறியிருந்தேன்.

கடந்த 1992ம் ஆண்டு சட்டத்தில் கட்டாய நன்கொடை நிரூபிக்கப்பட்டால் 3 வருடம் முதல் 7 வருடம் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை உள்ளது. இந்த சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என ராமதாஸ் கேட்டுள்ளார்.

7 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கக் கூடிய சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை எடுக்கும்போது அதற்கான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இல்லாமல் எவ்வாறு நடவடிக்கை எடுப்பது.

எதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது, யார் புகார் கொடுத்தார்கள், அதற்கான ஆதாரங்கள் என்ன, முதலீட்டு கட்டணம் குறித்து பெற்றோர்கள் அல்லது மாணவர்கள் எழுத்து பூர்வமான வாக்குமூலம் கொடுத்தார்களா என நீதிமன்றம் கேள்விகள் கேட்காதா.

தெரு முனையில் 4 பேர் பேசி கொண்டிருந்தார்கள், அதன் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது, தண்டனை வழங்குகள் என ராமதாஸ் எடுத்துரைப்பாரா, அவ்வாறு கூறினால் நீதிமன்றம் ஏற்குமா.

அதற்காகத்தான் ஆதாரத்துடன் புகார் வந்தால் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறினேன்.

மருத்துவ கல்லூரிகளில் நன்கொடை வசூலிக்கப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என நாடாளுமன்றத்தில் ஒரு எம்பி கேள்வி எழுப்பியதற்கு, ஆதாரத்தோடு புகார்கள் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பதிலளித்தார்.

இதை மருத்துவர் அய்யா அவர்களுக்கு நினைவு கூற விரும்புகிறேன்.

அதிக கட்டணம் அல்லது முதலீட்டு பணம் வசூலிக்கும் தனியார் கல்லூரி பெயரை ராமதாஸ் அவர்களே ஆதாரபூர்வமாக புகார் கொடுத்தால் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று கூறினேன்.

இது எப்படி பொறுப்பை தட்டி கழிகும் செயலாகும், முதல்வர் தனிப் பிரிவுக்கு இதுபோன்ற புகார் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள் என ராமதாஸ் கூறியுள்ளார். இவ்வாறு பொத்தாம் பொதுவாக யூகத்தின் அடிப்படையில் கூறுகிறார்களே தவிர புகார் எதுவும் வரவில்லை.

அதிக கட்டண வசூல் மற்றும் கட்டாய நன்கொடை பற்றி கருத்து சொல்லும்போது மாநிலங்களின் அதிகார வரம்பு பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.

கடந்த 1976ம் ஆண்டு வரை மாநில பட்டியலில் இருந்த கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்ட, எம்சிஐ, ஏஐசிடிஇ, என்சிடிஇ போன்ற அமைப்புகளுக்கு உள்ள அதிகார வரம்பினை சுட்டிக்காட்டி இருந்தேன்.

பல்வேறு நீதிமன்ற உத்தரவுகள் மாநில அரசு அதிகாரத்தை கட்டுபடுத்தியுள்ளன. தொழிற்கல்வி கல்லூரிகளை தொடங்க மாநில அரசின் தடையற்ற சான்றிதழ் கூட தேவையில்லை என அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு இதற்கு ஒரு உதாரணம்.

நீதிமன்ற உத்தரவின்படி கட்டண நிர்ணய குழுவின் தீர்மானங்களை மீறுகிற கல்லூரியின் அங்கீகாரத்தையோ, பல்கலைக் கழகங்களின் இணைப்பையோ திரும்ப பெறுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.

பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரி பொறுத்தவரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏஐசிடிஇ, எம்சிஐ, டிசிஐ ஆகியவற்றால் தான் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியும்.

அதனால்தான் இந்த அமைப்புகளுக்கு முன்னால் போராட்டம் நடத்தவேண்டும் என கூறினேன். இதிலென்ன விதண்டாவாதம் இருக்கிறது.

மத்திய அரசின் நிறுவனங்களுக்கும் தனியார் கல்லூரிகளின் கட்டண நிர்ணயித்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஏஐசிடிஇ கடந்த மே மாதம் 9ம் தேதி வெளியிட்ட நோட்டீஸை பார்த்தால் தெரியும். அதில் மாநில கட்டண குழு அல்லது பல்கலைக்கழகம் அல்லது அது போன்ற அங்கீகாரம் பெற்ற அமைப்பு ஏதாவது நிர்ணியித்த கட்டணத்தை விட அதிகமாக கேட்கப்படும் தொகையை கேப்பிடேசன் கட்டணம் என கருத முடியாது.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு அதிகமாக கேட்கும் கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எந்த நிறுவனமாவது அதிக கட்டணம் கேட்டால் அதை ஏஐசிடிஇன் கவனத்திற்கு மாணவர்கள் அல்லது பெற்றோர் கொண்டு வாருங்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டபோது நாங்கள் வற்புறுத்தியதன் விளைவாக வெளியிடப்பட்டது.

அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் இருக்குமேயானால் தவறு செய்யும் கல்வி நிறுவனங்கள் மீது மாநில அரசே நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிட்டிருந்தேன்.

இதற்கு பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், மாணவர்கள் முன் வரவேண்டும் என இந்த அறிக்கையின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த அறிக்கையை ராமதாஸுக்கு எதிராக வெளியிட்டதாக அவர் நினைக்க வேண்டாம்.

மக்களின் சந்தேகங்களுக்கும், குழப்பங்களுக்கும் நான் அளித்த விளக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார் பொன்முடி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X