இங்கிலாந்து பாட்டியை மணந்த பின்லேடனின் மகன்!
லண்டன்:ஓசாமா பின் லேடனின் 27 வயது மகனை 51 வயதாகும் இங்கிலாந்துப் பெண்மணி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இங்கிலாந்தின் செஷைர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேன் பெலிக்ஸ் பிரவுன் (51). இவர் ஐந்து முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எகிப்தில் பின் லேடனின் மகன் ஒமர் பின் லேடனை (27) சந்தித்தார்.ஸ்கெலிரோஸிஸ் நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக எகிப்துக்கு வந்தபோது லேடனின் மகனை ஜேன் சந்தித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
அதற்கு முதலில் எகிப்தின் பிரமிட் பகுதியை ஜேன் சுற்றிப் பார்க்கச் சென்றார். அப்போது ஒமர் பின் லேடன், குதிரை சவாரி செய்ததைப் பார்த்து அவரது அழகில் மயங்கிப் போனாராம் இந்த 51 வயது இங்கிலாந்துப் பெண்மணி. இதையடுத்து இருவரும் தீவிரமாக காதலித்தனர்.
இந்த நிலையில் இவர்களது வயதைக் கடந்த காதல் திருமணத்தில் முடிந்துள்ளது. எகிப்தில் இஸ்லாமிய முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சவூதியிலும் திருமணம் தொடர்பான சடங்குகள் நடந்துள்ளன.
திருமணத்திற்குப் பின்னர் தனது பெயரை ஸைனா முகம்மது என ஜேன் மாற்றிக் கொண்டு விட்டார். தங்களது திருமணத்தை ரியாத்தில் இருவரும் பதிவு செய்துள்ளனர். திருமண அங்கீகார சான்றிதழுக்காக தற்போது காத்துள்ளனர்.
முதலில் தனது திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தார் ஜேன். ஆனால் இப்போது பகிரங்கப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், திருமணமான மற்ற பெண்களைப் போலவே நானும் சந்தோஷமாக இருக்கிறேன்.
ஒமர்தான் எனது கணவர் என்று சொல்லிக் கொள்வதில் நான் தயங்கவில்லை. நான் ஒமரை கல்யாணம் செய்து கொண்டதை பலரும் விமர்சிப்பார்கள். ஆனால் அதுகுறித்து நான் கவலைப்படவில்லை. நான் பின் லேடனைக் கல்யாணம் செய்யவில்லை, அவரது மகனைத்தான் கல்யாணம் செய்துள்ளேன்.
பின் லேடன் சவூதியிலிருந்து வெளியேற்றப்பட்ட போது ஒமர் சிறு பையனாக இருந்தார். அவருக்கும் பின் லேடனின் செயல்பாடுகளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்றார் ஜேன்.
ஜேன் பிரவுன் இதுவரை ஐந்து முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். முந்தைய திருமணங்கள் மூலம் அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மெளல்டன் கிராமத்தில் கிறிஸ்தவ ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
பின் லேடனின் 17 மகன்களில் ஒமரும் ஒருவர். இவருக்கு ஏற்கனவே கல்யாணமாகி 2 வயதில் குழந்தையும் உள்ளது. இது தெரிந்துதான் தான் ஓமரை கல்யாணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார் ஜேன்.












Click it and Unblock the Notifications