அரசு ஊழியர்களுக்கு ‘லேப்டாப்'.. 4 ஆண்டுக்கு பிறகு சொந்தமாக்கி கொள்ளலாம் - மத்திய அரசு அதிரடி
டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் இனி ரூ.1.80 லட்சம் வரையிலான லேப்டாப்பை பெற்று கொண்டு 4 ஆண்டு பணியாற்றிய பிறகு எந்தவித கட்டணமும் இன்றி அதனை அவர்களே சொந்தமாக்கி கொள்ளும் வகையில் மத்திய நிதி அமைச்சகம் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இதற்காக மத்திய நிதி அமைச்சகத்தின் கொள்கைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. நிதி அமைச்சகத்தின் திருத்தப்பட்ட சாதன கொள்முதல் (Revised Device Purchase Policy) விதிகளின்படி பல்வேறு சீர்த்திருத்தங்கள் நடைமுறைக்கு வர உள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை செலவினத் துறை (Department of Expenditure) நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 2023 ஜூலையில் அமலில் இருந்த முந்தைய விதிகளுக்கு பதில் புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
முந்தைய விதிகளின்படி லேப்டாப்களை வாங்குவதற்கான அதிகப்படியான செலவுத்தொகை ரூ.1 லட்சம் முதல் ரூ.1.3 லட்சமாக இருந்த நிலையில் தற்போது அது அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் புதிய சீர்த்திருத்தங்களின்படி அரசு துறைகள் வரி உட்பட ரூ. 1.80 லட்சம் வரையிலான லேப்டாப்புகளை வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் (MacBook Air) மற்றும் மேக்புக் ஏர் புரோ (MacBook pro ) மாடல் லேப்டாப்புகளை ஒவ்வொரு மத்திய அரசு துறைகளும் தங்களின் அதிகாரிகளுக்கு வாங்கி கொடுக்க முடியும்.
இது லேப்டாப் மட்டுமின்றி மத்திய அரசு அதிகாரிகளின் டேப்லெட்டுகள் உள்பட பிற எலக்ட்ரானிக்ஸ் டிவைஸ்களை நான்கு ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு சொந்தமாக்கி கொள்ளலாம். இந்த புதிய கொள்கையின்படி அமைச்சகங்களும், ஒவ்வொரு துறைகளும் தங்களின் அதிகாரிகளுக்கு அலுவலக பணிக்காக லேப்டாப், டேப்லேட்டுகள், நோட்பேட், அல்ட்ராபுக்குகள், நோட்புக்குகள் உள்ளிட்ட டிவைஸ்களை வழங்க முடியும். இதற்கு முன்பு செல்போன் வழங்க அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அது இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
மேலும் ரூ.1.80 லட்சத்தில் லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் அதில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அடுத்ததாக இந்த லேப்டாப்புகளை நான்கு ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளே வைத்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அதாவது அரசு ஊழியர்கள் அலுவலக பணிக்கு பயன்படுத்தும் லேப்டாப்புகளை எந்த வித கட்டணமும் இன்றி தங்களின் வீடடிற்கு எடுத்து செல்ல முடியும்.
இதுதவிர இந்த லேப்டாப் உள்ளிட்ட டிவைஸ்கள் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் கிடைத்துவிடாது. ஊதிய நிலை 12 மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே கிடைக்கும். ஊதிய நிலை 8 முதல் 11 வரை உள்ள பணியாளர்கள் என்றால் அவர்களில் 50 சதவீதத்தினருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதன் அளவை 75 சதவீதமாக கூட்டப்பட்டுள்ளது.அதாவது அலுவலகப் பணிகளுக்கு தேவை என்று கருதப்பட்டால்,அந்தந்த அமைச்சகம் அல்லது துறையின் செயலாளர், நிதி ஆலோசகருடன் கலந்தாலோசித்து இந்த வரம்பை 75 சதவீதம் வரை உயர்த்தலாம்.
ஒருவர் 4 ஆண்டுக்கு பிறகு லேப்டாப்பை சொந்த பயன்பாட்டுக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்றால் அதில் உள்ள அலுவலக தகவல்கள் அனைத்தையும் முதலில் முழுமையாக நீக்க வேண்டும். அதன்பிறகே லேப்டாப்பை எடுத்து கொள்ள முடியும். ஒருவேளை நான்கு ஆண்டுகள் முடிவதற்கு முன்பே ஓய்வு பெறுபவர்கள் அல்லது அரசு பணியிலிருந்து விலகுபவர்கள், தங்கள் சாதனங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு பதிலாக, அதன் தேய்மான மதிப்பைக் கணக்கிட்டு (ஆண்டுக்கு 25 சதவீத தேய்மானம் என்ற அடிப்படையில்), அந்தத் தொகையைச் செலுத்திவிட்டு லேப்டாப்பை எடுத்து கொள்ளலாம்.
இது மத்திய அமைச்சகங்கள், துறைகள் அவற்றுடன் இணைந்த அல்லது துணை அலுவலகங்களுக்கு மட்டுமே பொருந்தும். மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், ஆலோசகர்களுக்கு இந்த திருத்தப்பட்ட கொள்கை விதிகள் பொருந்தாது.


Click it and Unblock the Notifications
