தேவகோட்டை: கிரிக்கெட் மோதல்- மாணவனைகுத்தி, எரித்து கொன்ற நண்பர்கள்!
தேவகோட்டை:தேவகோட்டையில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் மாணவனை நண்பர்களே எரித்து கொன்றனர்.
தேவகோட்டை விவேகானந்தாபுரத்தை சேர்ந்த நடேசனின் மகன் ஜெகதீஷ்( 17). நகரத்தார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மணிகண்டன் நேற்று முன் தினம் ஜெகதீஷ் வீட்டில் வந்து பைக்கில் அழைத்துச் சென்றான்.
வெகு நேரமாகியும் ஜெகதீசன் திரும்பவில்லை. ஜெகதீசின் பெற்றோர்கள் பல இடத்திலும் தேடி பார்த்து அவனை காணாததால் செய்வதறியாது திகைத்தனர்.
இந் நிலையில் நேற்று மாலை உடல் முழுவதும் தீக்காயங்கள் மற்றும் வெட்டுக் குத்து காயங்களுடன் ஜெகதீசின் சடலம் கடகாமபட்டி கண்மாய் ஓரத்தில் கிடந்தது.
தகவல் அறிந்த பெற்றோர் பதறித் துடித்தனர். போலீஸார் ஜெகதீசின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மணிகண்டனை போலீசார் தேடியபோது அவன் தலைமறைவாகிவிட்டது தெரிந்தது.
இதையடுத்து இறந்த மாணவனின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் குற்றவாளிகளை கைது செய்தபின் தான் உடலை வாங்குவோம் என்று கூறி திருச்சி-ராமேஸ்வரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட ஆரம்பித்தனர்.
போலீஸ விசாரணையில், மணிகண்டனும் அவனது நண்பர்களும் தான் கொலையை செய்தது தெரிய வந்தது.
சில நாட்களுக்கு முன்பு நடந்த கிரிக்கெட் விளையாட்டில் ஜெகதீசுக்கும், மணிகண்டனுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் மணிகண்டனை ஒரு கும்பல் கிரிக்கெட் விளையாட்டு பிரச்சனைக்காக கத்தியால் குத்தியது. இதற்கு காரணம் ஜெகதீஸ் தான் என மணிகண்டன் முடிவு செய்து அவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தான்.
அதற்காக தன் நண்பர்கள் 3 பேரை சேர்த்துக் கொண்டு ஜெகதீசிடம் அன்பாக பேசி வீட்டிலிருந்து கண்மாய் பகுதிக்கு அழைத்துச் சென்று கொலையை செய்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முக்கிய குற்றவாளியான மணிகண்டன் கோவையில் தலைமறைவாக உள்ளதாகத் தெரிகிறது. 2 பேர் பட்டுக்கோட்டையில் பதுங்கியுள்ளனர்.
இக் கும்பலில் ஒருவனை மட்டும் போலீஸார் பிடித்துள்ளனர்.
கண்மாய் பகுதியில் வைத்து ஜெகதீசை 4 பேரும் சேர்ந்து கத்தியால் குத்திவிட்டு, அதன் பின் கழுத்தை நெறித்து கொன்று, உடலை கெரசின் ஊற்றி எரித்தாக அவன் போலீசிடம் தெரிவித்துள்ளான்.
தலைமறைவாக உள்ள கொலை குற்றவாளிகளை போலீஸார் தேடி கோவைக்கும், பட்டுக்கோட்டைக்கும் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications