எதிர்முகாமிலிருந்து பிரதீபாவுக்காக வாக்களித்த30 எம்.பிக்கள் - 47 எம்.எல்.ஏக்கள்
டெல்லி:எதிர்க்கட்சிகளிலிருந்து 30 எம்.பிக்கள் மற்றும் 47 எம்.எல்.ஏக்கள் பிரதீபா பாட்டீலுக்கு கட்சி மாறி வாக்களித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 13வது குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் பிரதீபா பாட்டீல்.
பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி பிரதீபாவுக்கு வாக்களித்துள்ளனர்.
லோக்சபா உறுப்பினர்கள் 28 பேரும், ராஜ்யசபா உறுப்பினர்கள் 2 பேரும், 47 எம்.எல்.ஏக்கள் பிரதீபாவுக்காக கட்சி மாறி வாக்களித்துள்ளனர்.
பிரதீபாவுக்கு மொத்தம் 6 லட்சத்து 26 ஆயிரத்து 350 ஓட்டுக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூடுதலாக 11 ஆயிரத்து 766 வாக்குகள் அவருக்குக் கிடைத்துள்ளன. கட்சி மாறி கிடைத்த வாக்குகளால்தான் இவ்வளவு கூடுதல் வாக்குகள் பிரதீபாவுக்குக் கிடைத்துள்ளது.
அதேசமயம், ஷெகாவத்துக்கு 3 லட்சத்து 41 ஆயிரத்து 201 ஓட்டுக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 9 ஆயிரத்து 895 வாக்குகள் குறைந்துள்ளது.
குஜராத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள் 4 பேர், அசாம் கண பரிஷத்தைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏக்கள் பிரதீபாவுக்கு வாக்களித்துள்ளனர். அதேசமயம், தமிழகத்தில் அதிமுக, மதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களில் 4 பேர் பிரதீபாவுக்காக வாக்களித்துள்ளனர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை.
இதேபோல, ஜார்க்கண்ட், அருணாச்சலப் பிரதேசத்திலும் பிரதீபாவுக்கு, எதிர் முகாமிலிருந்து கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணிக்கு 37 பேர் உள்ளனர். அவர்களில் 8 பேர் பிரதீபாவுக்கு வாக்களித்துள்ளனர்.
அதை விட மோசமாக அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 8 பாஜக எம்.எல்.ஏக்களில் ஒருவர் மட்டுமே ஷெகாவத்துக்கு வாக்களித்துள்ளார். மற்ற 7 பேரும் பிரதீபாவுக்கு ஓட்டுப் போட்டு விட்டனர்.
ஓட்டுச் சீட்டில் ஓம் :
மத்திய பிரதேச மாநிலத்தில் ஷெகாவத்துக்கு ஆதரவாக விழுந்த 11 ஓட்டுக்களில் ஓம், ஜெய் ஸ்ரீ ராம் என்ற எழுத்துக்கள் இருந்ததால் அவை செல்லாத ஓட்டுக்களாக அறிவிக்கப்பட்டன. இதனால் ஷெகாவத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டது.
மிஸோரம், கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஷெகாவத்துக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. இதுதவிர ஆந்திரா, அருணாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், ஹரியானா, சிக்கிம்,மேகாலயா ஆகிய மாநிலங்களில் சிங்கிள் டிஜிட்டில்தான் ஷெகாவத்துக்கு ஓட்டு கிடைத்தது.












Click it and Unblock the Notifications