For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அயோத்தியில் காட்டிய ராமரை ராமேஸ்வரத்தில்காட்ட விரும்புகிறார்கள்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:அயோத்தியில் காட்டிய ராமரை தற்போது ராமேஸ்வரத்தில் காட்ட விரும்புகிறார்கள் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

மதுரையில் நடந்த ராமேஸ்வரம் - மானாமதுரை அகல ரயில் பாதை தொடக்க விழாவில் பேசிய கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெகுவாகப் புகழ்ந்தார்.

கருணாநிதி பேசுகையில், இந்த அகல ரயில் பாதை இன்று திமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் கடந்த 1997ம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் நடந்தது.

இந்தத் திட்டம் அப்படியே அடிக்கல் நாட்டு விழாவோடு நின்று விடாமல், இன்று முழுமை பெற்று அமலுக்கு வந்துள்ளதற்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் ஒரு காரணம். உரிய நிதியை ஒதுக்கி திட்டத்தை முழுமை பெற உதவியவர் அவர்தான்.

அதேபோல மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், அவரது சகா வேலு ஆகியோரையும் நான் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

பாலங்கள் ஊர்களை இணைப்பது மட்டுமல்லாமல், சமுதாயங்களை இணைப்பதற்கும் இந்த நாட்டிலேய தேவைப்படுகிறது. அந்தப் பாலங்களையும் இணைக்கக் கூடிய வல்லமையும், திறமையும் வாய்ந்த ஒருவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக இருக்கிற சோனியா காந்தி.

தேசிய ஒருமைப்பாட்டுக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் சிறந்த உதாரணமாக திகழ்கிறார் சோனியா காந்தி. அவருடைய சிறப்பு மிக்க தலைமையின் கீழ் இந்த பாலங்கள் மட்டுமல்ல, இடையில் உள்ள பாலங்கள் மாத்திரமல்ல, பல மதங்களுக்கிடையே, சமூக நல்லிணக்கப் பாலங்களையும் அமைப்பதற்கான ஆர்வம், அமைப்பதற்கான திறமை நமக்கெல்லாம் நிச்சயம் உண்டு.

மத்தியிலே நடைபெறுகிற ஆட்சி, தமிழகத்திலே நடைபெறுகிற இந்த மாநில ஆட்சி, இந்த இரண்டு ஆட்சிகளும் ஒன்றுக்கொன்று உறவோடு, நட்போடு, விட்டுக் கொடுக்கின்ற தன்மையோடு நடைபெறுகின்ற காரணத்தால்தான் மக்கள் பல நன்மைகளை சாதனைகளைப் பெற முடிந்திருக்கிறது.

இந்த இணக்கமான கொள்கை முறையினால் ஏற்பட்டுள்ள நன்மைகள் பலப் பல. ரூ. 2,427 கோடி முதலீட்டில் மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட சேது சமுத்திரத் திட்டம் அதில் ஒன்று. அந்தத் திட்டம் விரைவில் முடியக் கூடிய தருவாயை நெருங்கிக் கொண்டுள்ளது.

அதைத் தடுக்க வேண்டும் என்று ஒரு சிலர் முயன்று கொண்டிருக்கின்றனர். அயோத்தியில் காட்டிய ராமரை தற்போது ராமேஸ்வரத்தில் காட்ட விரும்புகிறார்கள். ஆனால் அதையெல்லாம் மீறி ராமர் எங்களுக்கும் வேண்டியவர்தான், நாங்கள் அவருக்கு துரோகி அல்ல என்று கூறுகிற பொதுமக்கள் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல நூறாண்டு கால கனவான தமிழ் செம்மொழி கனவு நனவாக சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும், அர்ஜூன் சிங்குமே காரணம்.

தமிழ் மொழிச் சான்றோர்களுக்கு இனி தேசிய விருது வழங்க வேண்டும் என இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் அறிவித்துள்ளார். அது தமிழ் மொழிக்கு கிடைத்துள்ள மற்றொரு பெருமையாகும்.

இதுபோல தேசிய மோட்டார் வாகன சோதனை மற்றும் ஆய்வுக் கூடம் ரூ. 500 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை அருகே ஓரகடத்திலே அடிக்கல் நாட்டப்பட்டது. நோக்கியா செல்போன் தொழிற்சாலையும் தொடங்கப்பட்டிருக்கிறது. தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையமும் தமிழகத்திலே, தாம்பரத்திலே நிறுவப்பட்டிருக்கிறது.

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் விரைவிலே தொடங்கப்படவுள்ளது. மகா பயங்கரமான பொடா சட்டத்தை ரத்து செய்த பெருமையும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கே உரித்தானதாகும்.

செல்போன் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. சேலம் உருட்டாலையை சர்வேதச தரத்திற்கு உயர்த்தி, புதிய குளிர் உருட்டாலை அமைக்க ரூ. 1,553 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கத்திப்பாரா சாலை சந்திப்பிலே பிரமாண்டமான மேம்பாலப் பணி மத்திய அரசின் ஒத்துழைப்புடன் நடந்து வருகிறது.

தமிழகம், புதுச்சேரி ஆகியவை பயன் பெறும் வகையில் 10 புதிய ரயில்கள் இந்த ஆண்டு இயக்கப்படுகின்றன. வருமான வரித்துறை மூலம் பல சலுகைகளை நம்முடைய நிதியமைச்சர் அவருடைய திறமையினால் அளித்திருக்கிறார்.

இத்தனை திட்டங்களும் வெற்றிகரமாக நிறைவேற மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு நல்கிக் கொண்டிருக்கிறது என்றார் கருணாநிதி.

நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், பாம்பன் கடல் பாலப் பணிகளை திறமையாக மேற்கொண்டதற்காக தென்னக ரயில்வேக்கு ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X