சேலம் கோட்டம் முடிவாகவில்லை - லாலு சொன்னதாக அச்சுதானந்தன் சொல்கிறார்!
திருவனந்தபுரம்:சேலம் ரயில் கோட்டத்தின் எல்லைகள் குறித்து தமிழக, கேரள முதல்வர்களுடன் பேசிய பிறகே இறுதி செய்யப்படும் என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் ரயில் கோட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்படவுள்ளது. முதல்வர் கருணாநிதி புதிய ரயில் கோட்டத்தைத் தொடங்கி வைக்கவுள்ளார்.
![]() |
ஆனால் இதற்கு கேரள அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ரயில் கோட்டத்தை எதிர்த்து கேரளாவிலிருந்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
இருந்தாலும் இந்தப் பிரச்சினையை விட விரும்பாத கேரளா, நாடாளுமன்றத்தில் தனது மாநில எம்.பிக்கள் மூலம் ரகளை செய்து பார்த்தது. மேலும், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தையும், புதிய கோட்டத்தைத் தொடங்கக் கூடாது என நிர்ப்பந்தித்து, நெருக்கடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், புதிய கோட்டத்தின் எல்லைகள் தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று லாலு கூறியதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் புதிதாக ஒரு தகவலை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கேரள அரசு நேற்று விடுத்துள்ள அறிக்கையில், சேலம் ரயில் கோட்டத்தை தொடங்குவது குறித்து கேரள அரசுடன் முறையாக கலந்து ஆலோசிக்கவில்லை என்று லாலு பிரசாத் யாதவுக்கு முதல்வர் அச்சுதானந்தன் போன் மூலம் அதிருப்தியை தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த லாலு பிரசாத் யாதவ், சேலம் கோட்டத்தின் எல்லைகள் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தமிழக மற்றும் கேரள முதல்வர்களுடன் பேசிய பிறகே அதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
சேலம் மற்றும் பாலக்காடு கோட்டங்களில் இடம் பெறும் பகுதிகள் குறித்து தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட மாட்டாது. முறையான ஆலோசனைகளுக்குப் பின்னரே முடிவு செய்யப்படும். எனவே கேரள அரசு கவலை கொள்ளத் தேவையில்லை என்று லாலு கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசின் இந்த புதிய தகவல், சேலம் ரயில் கோட்டம் தொடர்பான குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத் தரப்பிலிருந்தோ அல்லது ரயில்வே துறையிலிருந்தோ அல்லது ரயில்வே இணை அமைச்சர் வேலு தரப்பிலிருந்தோ அச்சுதானந்தனின் இந்த தகவல் குறித்து விளக்கம் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.













Click it and Unblock the Notifications