• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லாலு- வேலு மோதல்?-இல்லை என்கிறார் ராமதாஸ்

By Staff
|

சேலம்:சேலம் ரயில் கோட்டம் அமைப்பது தொடர்பாக ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் இணை அமைச்சர் ஆர்.வேலு இடையே எந்த மோதலும் இல்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சேலம் வந்த டாக்டர் ராமதாஸ் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சேலம் ரயில் கோட்டம் தொடர்பாக கேரள எம்.பிக்கள் நாடாளுமன்றத்திற்குப் பிரச்சினையைக் கொண்டு போயுள்ளனர். இதுதொடர்பாக அமைச்சர் வேலு மூலம், தமிழக எம்.பிக்கள் பிரதமரைச் சந்தித்து சுமூக தீர்வு காண முயற்சிக்கவுள்ளனர்.

திட்டமிட்டபடி சேலம் கோட்ட தொடக்க விழா செப்டம்பர் 14ம் தேதி நடைபெறும். ஒரு வேளை, சில நாட்கள் தள்ளிப் போகலாம். மற்றபடி சேலம் கோட்டம் தெடாங்குவதில் எந்த மாற்றமும் இல்லை.

தமிழக நலன்களை விட்டுக் கொடுக்க மாட்டோம். அதை அனுமதிக்கவும் மாட்டோம். சேலம் கோட்டம் தமிழகத்தின் உரிமைப் பிரச்சினை. அதற்கு உரிய முறையில் தீர்வு காண்போம்.

இந்த விஷயத்தில், லாலு பிரசாத்துக்கும், வேலுவுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும், கருத்து வேறுபாடும் இல்ைல.

அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரமதரை விமர்சித்துப் பேசியுள்ளார் ஜெயலலிதா. இது தேசியப் பிரச்சினை. இதில் உள்ளூர் பிரச்சினை போல கருத்து கூறக் கூடாது. முன்பே கூட நரசிம்மராவ், வாஜ்பாய் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார் ஜெயலலிதா. இப்படிப்பட்ட விமர்சனங்களை அவர் தவிர்க்க வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கவிழும் என்றோ, இடைத் தேர்தல் வரும் என்றோ கூற முடியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை. சமீபத்தில் பிரகாஷ் காரத் என்னிடம் தொலைபேசியில் பேசியபோது கூட, அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெறும் எண்ணத்தில் இருப்பதாக தெரிவிக்கவில்லை. அது அவர்களது நோக்கமும் இல்லை என்றும் எனக்குப் புரிந்தது.

இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை சமாளிக்கும் வல்லமையும், ராஜதந்திரமும் கூட்டணித் தலைவர்களிடம் உள்ளது. எனவே இந்த சிக்கல் தீரும்.

இந்தப் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நிலை என்னவோ அதுதான் பாமகவின் நிலையும் கூட.

திமுக, பாமக இடையே அடிக்கடி பல்வேறு மட்டங்களில் மோதல்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் மிக அதிகமாகவே உள்ளது. எனவேதான் கிராம அளவில் கட்சியினருக்கு இடையே நல்ல இணக்கம் ஏற்பட வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

இதுகுறித்து பலமுறை முதல்வரை நேரில் சந்தித்தும் கூறியுள்ளேன். அப்படியும் கருத்து வேற்றுமை வளர்ந்து வந்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் வருவற்குள் இந்த நிலைமை மாறி இணக்கமான சூழ்நிலை உறுவாக வேண்டும்.

அதற்கு திமுக தலைமைதான் வழி காண வேண்டும். பாமக சார்பிலும் அதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

கூட்டணித் தலைவர்களை முதல்வர் கருணாநிதி நன்கு மதிக்கிறார். நான் எப்போது வேண்டுமானாலும் அவரைப் போய் சந்தித்துப் பேச முடியும். எனவே நான் முதல்வரை சந்தித்துப் பேசுவது என்பது பெரிய பிரச்சினையே இல்லை. ஆனால் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் அளவில் இணக்கமான சூழ்நிலை உருவாக வேண்டியதுதான் முக்கியமானது.

தமிழகத்தில் காவல்துறை செயல்பாடு முற்றிலும் சரியில்லை. படுகொலைகள் அதிகரித்து விட்டன. சென்னையில் அடுத்தடுத்து பல கொலைகள் நடந்தன. தென்காசியில் ஒரே நாளில் 6 பேர் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் பிரமுகர் ஒருவரைக் கொலை செய்து விட்டு, உடல் வேறு, தலை வேறாக போட்டுச் செல்கிறார்கள்.

சினிமா படங்களில் மட்டுமே நாம் பார்த்துள்ள கார் குண்டுவெடிப்பு சிவகங்கையில் நிஜமாகவே நடந்தது. காவல்துறை முற்றிலும் செயலிழந்து விட்டது என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X