For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-சு.சுவாமி: கருணாநிதி விலக வேண்டும்-வைகோ

By Staff
Google Oneindia Tamil News


சென்னை:

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி தமிழகத்தில் திமுக பந்த்தை டிஸ்மிஸ் நடத்தியுள்ளது. எனவே உடனடியாக திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், பந்த் நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல், திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும், பந்த்தை நடத்தியுள்ளன.

இது அரசியல் சட்டத்தை மீறிய செயலாகும். முழுமையான அளவில் இந்த பந்த் நடக்க அரசு உதவியுள்ளது, தூண்டியுள்ளது.

எனவே மைனாரிட்டி திமுக அரசு, அரசியல் சட்டப்படி ஆட்சியை நடத்தும் அருகதையை இழந்து விட்டது. எனவே தமிழகத்தில் அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக நான் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார் சுவாமி.

கருணாநிதி விலக வேண்டும் - வைகோ:

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்ததையும் மீறி பந்த் நடத்தப்பட்டுள்ளது. இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து உடனடியாக கருணாநிதி விலக வேண்டும்.

சேது சமுத்திர திட்டம் தொடர்பாக திமுக தலைமையில் இன்று நடத்தவிருந்த பந்த், அரைகுறையாக நடந்த உண்ணாவிரதம் இரண்டும் தேவையில்லாதது.

சேது சமுத்திர திட்டத்திற்கு யாருமே எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், மத்திய அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, அந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த சொல்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கிறது. அதை விடுத்து பந்த், உண்ணாவிரதம் என்று அறிவித்தது தேவையில்லாத செயலாகும்.

ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சேது சமுத்திர திட்டம் தொடர்பாக பந்த் நடத்த அழைப்பு விடுத்தார் கருணாநிதி. ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து விட்டது. அந்த கோபத்தில் தான் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.

அதையும் கண்டித்த உச்சநீதிமன்றம், ஏன் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கூடாது என்று மத்திய அரசை கேள்வி கேட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்பார்க்காத கருணாநிதி திடீரென்று பாதியிலேயே உண்ணாவிரதத்தை விட்டு எழுந்து சென்று விட்டார்.

பந்த்திற்கு உச்சநீதிமன்றம் நேற்று தடை விதித்து விட்டதால், தமிழகம் முழுவதும் இன்று காலையில் அனைத்து கடைகளும் திறந்திருந்தன. ஆனால் திமுக தொண்டர்கள் அவர்களை மிரட்டி கடைகளை மூடச் செய்ததுடன், அரசு பேருந்துகளையும் இயக்கவிடாமல் தடை செய்து மக்களை இயல்பு வாழ்க்கைய பாதிக்க செய்தனர்.

அதனால் தான் அதிமுக சார்பில் பேருந்துகளை உடனே இயக்க உத்தரவிடுமாறு இன்று காலை உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை மதிக்காத தமிழகத்தில் ஏன் குடியரசு ஆட்சியை அமல்படுத்த கூடாது என்று மத்திய அரசை கேட்டிருக்கிறது.

எனவே இதற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் கருணாநிதி முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றார்.

ஜெ. கருத்துக்கு முரணாக வைகோ:

முன்னதாக வைகோ வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு சேது சமுத்திரத் திட்டம் அவசியம் தேவை. மிகவும் பொருத்தமான திட்டம் இது.

இந்தத் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், திமுக அரசு, இதை சரியான திசையில் கொண்டு செல்லாமல், இந்துக்கள் பற்றிப் பேசி திசை திருப்பி விட்டது.

திட்டத்தை விரைவாக அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தாமல், இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்திப் பேசி, ராமர் எங்கு படித்தார், அவர் என்ஜீனியரா என்றெல்லாம் பேசி பிரச்சினையை ஏற்படுத்தி விட்டார்.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றும் வழி குறித்து யோசிக்காமல் பந்த் நடத்தப் போவதாக அறிவித்தார் கருணாநிதி. ஆனால் அதை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. இது கருணாநிதியின் செயலுக்கு கிடைத்த கண்டனமாகும் என்று கூறியிருந்தார்.

இதன்மூலம் சேது சமுத்திரத் திட்டம் பொருளாதார ரீதியில் சாத்தியமில்லாதது என்று கூறி வரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கருத்துக்கு முரணாக, வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X