வாயால் வரையும் சாதனையைத் தொடங்கிய புதுவை என்ஜீனியர்
சென்னை:
கின்னஸ் சாதனை படைப்பதற்காக வாயால் ஓவியம் வரையும் முயற்சியை புதுச்சேரியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் இன்று தொடங்கினார்.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். 26 வயதாகும் ராஜேந்திரன் சென்னையில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வருகிறார். ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட ராஜேந்திரன் வாயாலேயே ஓவியங்களை வரைந்து சாதனை படைத்தவர்.
2004ம் ஆண்டு சுனாமி தாக்கியபோது அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக வாயால் பல ஓவியங்களை வரைந்து நிதி திரட்டி பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கி தனது மனிதாபிமானத்தைக் காட்டியவர்.
இந்த நிலையில் தற்போது கின்னஸ் சாதனை படைப்பதற்காக புதிய முயற்சி ஒன்றை தொடங்கியுள்ளார் ராஜேந்திரன். அதாவது அன்னை தெரசாவின் பிரமாண்ட ஓவியத்தை வாயால் தீட்டவுள்ளார் ராஜேந்திரன்.
சென்னை விஜிபி டிரேட் சென்டரில் ராஜேந்திரனின் இந்த சாதனை முயற்சி இன்று தொடங்கியது. இந்த ஓவியத்தை வரைந்து முடிக்க 11 நாட்கள் ஆகுமாம். 20க்கு 30 அடி என்ற அளவிலான கான்வாஸில், அக்ரிலிக் வண்ணங்களைக் கொண்டு இந்த ஓவியத்தை வரைகிறார் ராஜேந்திரன்.
1999ம் ஆண்டு முதல் ஓவியம் வரைந்து வரும் ராஜேந்திரனின் சாதனையைப் பார்வையிட்டு கின்னஸ் அமைப்புக்கு சாட்சி சான்றிதழை அளிக்க ஒரு வக்கீல், டாக்டர் மற்றும் பேராசிரியர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
சாதனை ராஜேந்திரனுக்குப் புதிதல்ல. ஏற்கனவே முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் படத்தை வாயால் தீட்டி லிம்கா சாதனைப் புத்தகத்தில் அவர் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications