அடுத்த தேர்தலில் பாமக தலைமையில் புதிய கூட்டணி: ராமதாஸ்
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக இல்லாத புதிய கூட்டணியை பாமக உருவாக்கும் என அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை இந்து நாளிதழ் அலுவலகத்தில் அதன் நிருபர்கள் குழுவுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டி:
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை நீடிப்போம். அதே போல திமுக அரசுக்கு அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை நிச்சயம் ஆதரவு தருவோம்.
அதே நேரத்தில் அடுத்த சட்டசபை தேர்தலில் நாங்கள் புதிய கூட்டணி அமைப்போம். அதில் திமுக, அதிமுக தவிர்த்த பிற கட்சிகள் இடம் பெறும்.
1967ம் ஆண்டுக்குப் பின் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறி வந்துள்ளன. ஆனால், பாமக மட்டுமே கூட்டணி மாறி வருவதாக பொதுப்படையாக குற்றச்சாட்டு வைப்பது தவறு என்றார்.
சென்னை அருகே துணை நகரம் அமைப்பது, சென்னை விமான நிலைய விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு நீங்கள் முட்டுக் கட்டை போடுவதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ராமதாஸ்,
ஓராண்டுக்கு முன் துணை நகரம் அமைப்பது தொடர்பாக அப்போதைய மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் என்னை சென்னையில் வந்து சந்தித்து பேசினர்.
இதனால் 5,000 குடும்பங்களை வெளியேற்ற வேண்டிய நிலை வரும் என்றனர். இது குறித்து நான் எனது கருத்தைத் தெரிவித்த நிலையில் மறு நாளே முதல்வர் கருணாநிதி இந்த திட்டம் அமலாக்கப்படவுள்ளதாக அறிவித்தார்.
இதையடுத்துத் தான் பாதிப்புக்குள்ளாக இருந்த மக்களை சந்தித்தேன். அவர்களது எதிர்ப்பு குறித்து பேசினேன். இதைத் தொடர்ந்து தான் இந்தத் திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் அறிவித்தார்.
என்னைப் பொறுத்தவரை மக்களை பாதிக்கும் எந்த வளர்ச்சி திட்டங்களும் தேவையே இல்லை.
தமிழகத்தில் நடப்பது ஒரு மைனாரிட்டி ஆட்சி. ஆனால், குறைந்தபட்ச பொதுத்திட்டமோ அல்லது வேறு எந்த திட்டமும் வகுக்கப்படவில்லை.
நிலம் கையகப்படுத்தும் விஷயத்தை பொறுத்தவரை எந்த ஒரு திட்டத்துக்கும் மக்களாக விரும்பி தங்கள் நிலத்தை தர முன் வந்தால் அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.
சேது சமுத்திர திட்டம் நிறை வேற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் விருப்பம். ஆனால் குறிப்பிட்ட எந்த ஒரு மதத்தினரின் உணர்வுகளுக்கும் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றார் ராமதாஸ்.