For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளைஞர்கிடையே மொழியுணர்வு மங்கிவிட்டது-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ் மொழியை காக்க வேண்டும் என்ற உணர்வு இளைஞர்கள் மத்தியில் மங்கிவிட்டது என முதல்வர் கருணாநிதி கூறினார்.

கவிஞர் வாலி எழுதிய கலைஞர் காவியத்தின் சிடி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை கவிதை நடையில் வாலி பேசியிருக்கிறார். இதற்கு எம்எஸ்வி இசையமைத்துள்ளார். 18 நிமிடங்கள் ஓடும் இந்த சிடியை இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் வெளியிட தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் பெற்றுக் கொண்டார்.

இந் நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில்,

வாலி என்னுடைய நன்றியுடைய நண்பர். அவர் இந்தக் காவியத்தை எழுதி வெளியிட வேண்டும் என்று நீண்ட காலமாக என்னிடம் சொல்லிவந்தார்.

நான் இப்போது வேண்டாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தடுத்து நிறுத்தினேன். என்னை அழைத்தால் நான் எப்படியாவது தடுப்பேன் என்பதால், என்னை அழைக்காமல் விழா ஏற்பாடுகளை வாலி செய்தார்.

காதல் திருமணம் செய்து கொள்ளும் உள்ளங்களைப் போல இந்த நிகழ்ச்சி அமைந்துவிட்டது. நான் இல்லாமல் விழா நடத்த திட்டம் தீட்டினார். கடைசியில் சம்மதம் தெரிவித்து நானே விழாவில் கலந்து கொண்டேன்.

வாலி அழைத்ததால் வந்தேன். சுக்ரீவன் அழைத்தால் வந்திருக்க மாட்டேன். ஏனென்றால், சுக்ரீவன் சுயநலத்திற்காக ராமனிடம் நட்பு கொண்டான். இதை நான் சொல்லவில்லை, ராஜாஜி எழுதியுள்ளார். வாலியை ராமர் கொன்றது நியாயமில்லை என்றும் ராஜாஜி எழுதினார். இதை நான் சொன்னால் தலை, கை கால்களை வெட்டுவேன் என்று வட மாநில பயில்வான்கள் சொல்கின்றனர்.

நான் 14 வயதில் இருந்தே பொதுத் வாழ்க்கையில் ஈடுபட்டவன். திருவாரூரிலேயே பல மிரட்டல்களையும்,
போராட்டங்களையும் சந்தித்தவன். தஞ்சை மாவட்டத்தில் நிலக்கிழார்களை, பண்ணையார்களை எதிர்ப்பவர்கள் கை,
கால்களை இழக்க வேண்டியிருக்கும். அதையெல்லாம் நான் சமாளித்தவன்தான்.

பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் போராட்டங்களைக் கண்டு பயந்துவிடக்கூடாது. அதற்கெல்லாம் பயந்தால் மானம் போய்விடும்.

புராணங்கள் பற்றி இதிகாசங்கள் பற்றி வாலி தவறாக எழுதினால் ஒன்றும் இல்லை. ஆனால் கலைஞர் பற்றி தவறாக எழுதினால் சும்மா விடமாட்டோம் என்று இங்கு பேசிய வீரமணி வீராப்பாக கூறினார்.

என்னைப்பற்றி எழுத வாலிக்கு சுதந்திரம் உண்டு. அவர் தவறாக எழுதமாட்டார். அவர் ராமன் பற்றி தவறாக எழுதினால் வீரமணி கேட்க மாட்டார்.

ஏன் என்றால் இந்த ராமாயணம் பற்றி கூறினால், அந்த ராமாயணம் என்பார்.

வால்மீகி எழுதிய ராமாயணத்தில் சீதை ராமனின் மனைவி. துளசிதாசர் எழுதிய ராமாயணத்தில் சீதைக்கு ராமன் அண்ணன். இதை வாலியை சாட்சியாக வைத்து சொல்கிறேன்.

காரியத்தில் தவறிருந்தால், சுட்டிக் காட்டும் திறமை வீரமணிக்கு உண்டு. இதுதான் சரியான ராமாயணம் என்று வாதாடும் உரிமை வாலிக்கு உண்டு. நாம் படித்து அறியாத பழைய புராணங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம். விஞ்ஞான உலகில் தவறுகளை செய்துவிட்டு தப்பிக்க முடியாது. ஏனென்றால், நாளை இளைஞர்கள் கேள்வி கேட்பார்கள். அதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

இந்தக் காவியத்தை வாலி இயற்றி உள்ளார். அவர் என்னுடைய 30 வயது வரையுள்ள நிகழ்ச்சிகளை அதிக அளவில் சுட்டிக்காட்டி உள்ளார். அதைத்தான் நடிகர் சிவகுமாரும் இங்கு பேசும்போது எடுத்துரைத்தார்.

நான் இளமையில் ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து போராடினேன். அப்போது தமிழை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு இளைஞர்களுக்கு இருந்தது. ஆனால், இன்றைக்கு தமிழ் மொழியை காக்க வேண்டும் என்ற உணர்வு இளைஞர்கள் மத்தியில் மங்கிவிட்டது என்றார் கருணாநிதி.

கவிஞர் வாலி பேசுகையில், எனது உயிரை காப்பாற்றியவர் கருணாநிதி. அவரை பற்றி நான் பாடாவிட்டால் என் நாக்கு இருப்பதில் அர்த்தமில்லை. என் பேச்சும் மூச்சும் இருக்கும் வரை அவரை போற்றிப் பாட வேண்டும்.

கருணாநிதி மிக உயர்ந்த மனிதர். மனிதநேயம் கடைப்பிடிப்பவர். தனது இளமைப் பருவம் முதல் கொள்கைக்காக வாழ்ந்து வருபவர். எனக்கு இருக்கும் எல்லா புகழும் கருணாநிதிக்கே என்றார்.

கவிஞர் வைரமுத்து பேசுகையில், முதல்வர் கருணாநிதி ஒவ்வொரு நிமிடத்தையும் நேசிக்கிறார். வாழ்க்கையை ரசிக்கிறார். அதனால், அவருக்கு முதுமை ஏற்படவில்லை. இயங்கிக் கொண்டிருப்பவருக்கு முதுமை என்பது வரம். இயங்காமல் இருப்பவருக்கு முதுமை ஒரு சாபம். 84 வயது கொண்ட உங்களுக்கு முதுமை எட்டவில்லை என்றார்.

விழாவிற்கு எம்.ஜி.ஆர்.கழக நிறுவன தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தலைமை தாங்கினார். விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு தலைவர் நல்லக்கண்ணு, நடிகர்கள் சிவக்குமார், சத்யராஜ், இயக்குனர்கள் பாரதிராஜா, வசந்த், கவிஞர்கள் முத்துலிங்கம், மு.மேத்தா, பா.விஜய், ரவி பாரதி, பழனி பாரதி, பிறைசூடன், நா.முத்துகுமார், ம.வே.பசுபதி, நடிகை ராதிகா ஆகியோரும் பங்கேற்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X