For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியாவில் தமிழ் எம்.எல்.ஏ. சுட்டுக் கொலை - பதட்டம்

By Staff
Google Oneindia Tamil News

S.Krishnasamy

ஜோஹர் பாரு: மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் மலேசியாவில் பதட்டம் நிலவுகிறது.

மலேசியாவின் ஜோஹர் மாகாண மலேசிய இந்திய காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்தவர் டத்தோ எஸ்.கிருஷ்ணசாமி (61). இவர் தெங்கர்ரோ சட்டசபை உறுப்பினரும் ஆவர்.

நேற்று இவர் மாநில மலேசிய இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜலான் செக்கட் என்ற இடத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று கிருஷ்ணசாமி தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அலுவலகத்திற்குச் செல்வதற்காக கட்டடத்தின் கீழே உள்ள லிப்ட்டில் அவர் ஏறியுள்ளார்.

அப்போது லிப்ட்டில் கொலையாளியும் உடன் ஏறியதாக தெரிகிறது. லிப்ட் கதவு மூடிக் கொண்டதும், தனது கைத் துப்பாக்கியால் கிருஷ்ணசாமியை மிக நெருக்கமாக நின்று சுட்டுள்ளார்.

இதில் கிருஷ்ணசாமியின் இடது நெற்றியில் குண்டு பாய்ந்து பின்புறம் துளைத்துச் சென்றது. சம்பவ இடத்திலேயே கிருஷ்ணசாமி உயிரிழந்தார்.

கொலையை செய்த பின்னர் லிப்ட்டை நிறுத்தி இறங்கிய அந்த நபர், வேகமாக கீழே இறங்கி ஓடினார். பின்னர் கீழே இருந்த தனது சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பினார். அந்த நபர் கருப்புச் சட்டையும், ஜீன்ஸும் அணிந்திருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். ஜலான் வோங் அ புக் என்ற பகுதியை நோக்கி அவர் சென்றதாகவும் கூறியுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த கிருஷ்ணசாமியின் உடலுடன் லிப்ட் மேலே சென்றது. லிப்ட் 5வது மாடிக்குச் சென்று முதலில் நின்றது. 2வது மாடியில் உள்ள தங்களது கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக லிப்ட்டுக்காக அங்கு கட்சி செயலாளர் கமலா, புத்தேரி பகுதி தலைவர் விதித்ய மோகன் ஆகியோர் காத்திருந்தனர்.

லிப்ட் கதவு திறந்தபோது அதில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் பிணமாக கிடப்பதைப் பார்த்து அவர்கள் அதிர்ந்தனர். லிப்ட்டில் ஏறாமல் படிகள் வழியாக 2வது தளத்திற்கு கட்சியினரிடம் கொலை குறித்துக் கூறினர்.

பின்னர் லிப்ட் மீண்டும் கீழே இறங்கி வந்தது. 2வது மாடியில் நின்றபோது காடிங் பகுதி மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் முருகன் உடலைப் பார்த்தார். கிருஷ்ணசாமியாக அது இருக்குமோ என்ற சந்தேகம் அவருக்கு வந்தது. அருகில் சென்று பார்க்க முயன்றபோது லிப்ட் மூடியபடி கீழே செல்ல ஆரம்பித்தது.

உடனடியாக கீழே இறங்கி ஓடிய அவர் லிப்ட் கீழ்த் தளத்தில் நின்றதும் உடலின் அருகில் சென்று முகத்தைத் திருப்பிப் பார்த்தார். அப்போதுதான் அது கிருஷ்ணசாமி என்பது தெரிய வந்தது.

உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. போலீஸாரும் விரைந்து வந்தனர்.

கொலையாளி இந்தியர்?

இந்த சம்பவம் குறித்து ஜோஹர் காவல்துறை துணை ஆணையர் டத்தோ ஹூசேன் இஸ்மாயில் கூறுகையில், கொலையாளிக்கு 30 வயதுக்குள் இருக்கும். அவர் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.

கொலையாளியைப் பிடிக்க மாநிலம் முழுவதும் வலை விரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கொலையாளி பிடிபடுவார் என்று தெரிவித்தார்.

இந்தக் கொலைக்கு கட்சிக்குள் நிலவிய பூசல் ஏதேனும் காரணமா அல்லது பணப் பிரச்சினை காரணமாக நடந்ததா, உறவினர்கள் யாருக்கேனும் இதில் தொடர்பு இருக்குமா என்று பல கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தலைநகர் கோலாலம்பூரில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம் நடத்திய பின்னர் அங்கு இந்திய வம்சாவளியினருக்கும், மலேசிய அரசுக்கும் இடையே சுமூக நிலை இல்லை.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு யாரேனும் விஷமிகள் கிருஷ்ணசாமியைக் கொலை செய்திருக்கலாமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் கிருஷ்ணசாமியின் உடல் அவரது சொந்த ஊரான செகமாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

கடந்த 7 ஆண்டுகளில் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் கொல்லப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2000மாவது ஆண்டு நவம்பர் மாதம் டாக்டர் ஜோ பெர்னாண்டஸ் என்கிற எம்.எல்.ஏ பக்கிட் மர்டஜாம் என்ற இடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

சுட்டுக் கொல்லப்பட்ட கிருஷ்ணசாமி, மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்தார். 1995ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தெங்கர்ரோ மாநில சட்டசபைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுட்டுக் கொல்லப்பட்ட கிருஷ்ணசாமிக்கு, சொர்ணவள்ளி என்ற மனைவியும் ராணி, ராதிகா (30) என்ற இரு மகள்களும், ராஜ்குமார் (33) ரேவன் குமார் (25) ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X