For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சமத்துவ பொங்கல் கொண்டாடுவோம் - கருணாநிதி அழைப்பு

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: பொங்கல் திருநாளன்று, வீடுகள், அரசு அலுவலகங்கள் அனைத்திலும் உற்சாகமாகவும், சாதி, மத, இன வேறுபாடுகள் இன்றி சமத்துவ பொங்கல் கொண்ாடுவோம் என முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டை உலகுக்கு உணர்த்தும் வகையில், தைத் திங்கள் முதல்நாள் தமிழர் திருநாள் என ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.

தமிழ் சமுதாயம் கொண்டாடும், பொங்கல் விழா ஜாதி, மத, இன வேறுபாடுகள் எதுவுமின்றி உழைப்பையும், உழைப்புக்கு உதவியவர்களையும் எண்ணி நன்றி தெரிவிக்கும் இனிய பண்பாட்டு திருவிழாவாக, மனித நேயம் வளர்க்கும் மகத்தான திருவிழாவாக, தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் கொண்டாடப்படுகிறது.

மனித சமுதாயத்தின் பொது விழா:

யாதும் ஊரே யாவரும் கேளிர் என மக்கள் ஒவ்வொருவரையும் நம்முடன் பிறந்தவராக கருதும் உயரிய சிந்தனையை உலகுக்கு தந்த தமிழினம் மனித சமுதாயத்திற்கே பொதுவான திருவிழாவாகக் கண்டுள்ள தனிப்பெரும் திருநாள் பொங்கல் திருநாள்.

அந்த பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தனிச்சிறப்புடன் கொண்டாடப்பட வேண்டும் என விரும்பி கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பொங்கல் திருவிழா மிகுந்த எழுச்சியுடன்
கொண்டாடப்பட்டதை மகிழ்ச்சியோடு நினைவு கூறுகிறேன்.

தமிழக அரசு அளித்த வாக்குறுதிகளையெல்லாம் தடையின்றி நிறைவேற்றி மக்கள் சமுதாயம் பயன் கண்டுவரும் வேளையில், வானம் வரையாது வழங்கி, தமிழ்நிலம் முழுவதும் விளைச்சல் நிறைந்து, உழவன் உள்ளத்தில் உவகை பொங்கிடும், வேளையில் ஏழைப் பாட்டாளி மக்களின் இதயம் குளிர்ந்திடும் வேளையில் தொழிலாளர் சமுதாய தோழர்களையெல்லாம் கோரிக்கைகள் கைகூடி களித்திடும் வேளையில் இந்த ஆண்டின் பொங்கல் திருநாளையும், முந்தைய ஆண்டைவிட மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடிட தமிழக அரசின் சார்பில் தமிழ் மக்களை அன்போடு வேண்டுகிறேன்.

இந்த ஆண்டின் பொங்கல் நாளை ஒவ்வொரு வீட்டிலும் வண்ணக் கோலங்கள் இடுவீர். மாவிலை தோரணங்கள் அழகுற அமைத்திடுவீர். ஊர் பொது இடங்களில் தென்னை, வாழை, ஈச்சங்குலைகளும், தோகை விரிந்த கரும்புகளும், இஞ்சி, மஞ்சள் கொத்துகளும் கொண்டு அலங்கரிப்பீர்.

பொது இடங்களில் பொங்கல் வைப்போம்:

பொங்கல் நாளன்று பொது இடங்களில் அழகுபடுத்தி அனைவரும் அங்கு கூடி வீடுகள் தோறும் புதுப் பானைகள் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடுவீர். மகளிர், இளைஞர் திறம்விளங்க கோலப் போட்டிகளையும், வீர விளையாட்டுகளையும் ஆங்காங்கே நடத்துங்கள்.

கிராமப்புற நடனங்களும், மற்ற கலை நிகழ்ச்சிகளும், நடத்தி விருதுகளும், பரிசுகளும் வழங்கிடுவீர். வணிக நிலையங்கள், சாலைகள், சோலைகள் அனைத்தையும் வண்ண விளக்குகளால் ஒளி உமிழச் செய்திடுவீர்.

கிராமப்புறங்களிலும், நகரங்களிலும், வீடுகள் தோறும், அரசுக் கட்டடங்கள் அனைத்திலும் பொங்கல் நாளன்று வண்ண, வண்ணமாய் சரவிளக்குகள் அமைத்து குலுங்கிட செய்வீர்.

தமிழகம் முழுவதும் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் பண்பாட்டை தரணிக்கு வெளிப்படுத்தும் தமிழர் திருவிழா மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் தமிழகம் எங்கும் ஒவ்வொரு பகுதியிலும் கொண்டாடப்பட ஊக்கமளிக்க வேண்டும்.

புதிய உணர்வுகள் ஊற்றெடுக்கட்டும்:

பொங்கல் விழா கொண்டாடும் வேளையில், புதிய உணர்வுகள் நம் உள்ளத்திலே ஊற்றெடுக்க வேண்டும். ஜாதி, மத, இன வேறுபாடுகளை அகற்றிடும் அன்பு உணர்வு தழைத்திட வேண்டும்.

குறிப்பாக அரசியல் கட்சிகள் வேறுபாடுகளுக்கு சற்றும் இடம் கொடுத்திடாமல் இந்த பொங்கல் விழா இன உணர்வுடன் அனைவரையும் இணக்கும் அருங்கலை விழாவாக மலர வேண்டும்.

எனவே, ஒவ்வொரு பகுதியிலும் மகளிர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், ஆங்காங்கே உள்ள அமைப்புகளின் பிரதிநிதிகள், சான்றோர்கள் மற்றும் பொதுமக்கள் யாவரும் ஒருங்கிணைந்து இந்த ஆண்டின் பொங்கல் விழாவுக்கு மேலும் பெருமை சேர்க்க அணி திரள்வீர்.

பொங்கள் திருநாளை கொண்டாடி தமிழகம் எங்கும் மகிழ்ச்சி எழுந்தது. தமிழர் இதயமெல்லாம் இன்பம் செழித்தது என்று ஊரும், உலகும் பேச ஒன்றுபட்டு பொங்கல் விழா கொண்டாட என் அருமைத் தமிழ் மக்களை அன்புடன் வேண்டுகிறேன்.

இந்த ஆண்டின் பொங்கல் விழா சிறப்பாக, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ.1 கோடியே 6 லட்சத்தை சிறப்பு ஒதுக்கீடாக அனுமதித்து ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகளும், கலைப் போட்டிகளும் நடத்தி, மாவட்ட அளவில் பரிசுகள் வழங்கி சமத்துவ பொங்கல் கொண்டாட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X