For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜய்காந்துடன் காங். ரகசிய கூட்டு: கி.வீரமணி சந்தேகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இருந்து கொண்டே எதிரணியில் உள்ளவர்களுடன் (விஜய்காந்த்), காங்கிரஸ் ரகசியமாக பேசி வேறு ஏதோ திட்டம் வகுத்து வருவதாக சந்தேகம் எழுந்துள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக தலைவர் கருணாநிதி யாரை ஆதரித்தாலும், அதில் மிக உறுதியாக உண்மையாக இருப்பார். எதிர்த்தாலும் அதிலும் மிகவும் உறுதி காட்டுவார் என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே தெளிவாகக் கூறியுள்ளாரே.

ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அருண்குமார் என்ற ஆந்திர பார்ப்பனர் சில நாட்களுக்கு முன் திருச்சியில் அவரது கட்சி ஊழியர் கூட்டத்தில் பேசும்போது, நான் நடிகர் விஜயகாந்தை சந்தித்து அரசியல் பேசினேன். அதை அதன் விவரத்தை இப்போது வெளியிட மாட்டேன் என்று பேசியுள்ளார்.

அதுமட்டுமல்ல அவர் பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன நிலையிலும், மரியாதை நிமித்தமாகக்கூட தமிழ்நாட்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தலைமை தாங்கும் அதன் தலைவர் முதல்வரை இதுவரை சந்திக்கவும் கூட இல்லை.

அப்படிப் பேசுவது அவரது உரிமை என்றாலும், அத்தகைய கருத்துகள் இப்போதைய நிலையில் திமுக தொண்டர்களிடையே திமுக கூட்டணியின் ஆதரவாளர்களிடையே எத்தகைய அரசியல் விளைவுகளை உருவாக்கும் என்பதை யோசித்திருக்க வேண்டாமா?

தமிழ்நாட்டில் காங்கிரஸ், திமுகவின் தலைமையிலான கூட்டணியிலிருந்து கொண்டே எதிரணியில் உள்ளவர்களுடன் ரகசியமாக பேசி வேறு ஏதோ திட்டம் வகுக்கிறார்கள் போலும் என்று நினைத்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி எப்படி வெற்றிகளை பெற்று மீண்டும் மத்தியில் பாஜக கூட்டணியை வீழ்த்தி, மதச்சார்பற்ற அரசை நிறுவ முடியும் என்று சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டாமா?

திமுகவைப் பொறுத்த வரையில் எதற்கும் தயாராக இருக்கிறது என்பதை அதன் தலைவர் கடந்த 3ம் தேதி சென்னையில் தெளிவாகக் குறிப்பிட்டு விட்டார்.

எங்கள் நிலைப்பாட்டில் மாறுதல் இல்லை. காங்கிரஸ் பேச்சாளர் டெல்லியில் கூறிய பின்பும் இங்கே சில கருத்துக்கள் வைக்கப்படுவது, வீண் குழப்பத்தை விதைக்காதா?, அதன் பாரதூர விளைவுகள் எப்படி இருக்கும்?.

அதுபற்றி உங்களுக்கென்ன கவலை என்று எங்களை யாரும் கேட்க முடியாது. காரணம் மதச்சார்பற்ற அணி உருவாக வேண்டும் என்பதற்கு, எங்கள் பங்கை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் ஒரு மக்கள் இயக்கம்; பதவி நாடாத லட்சிய சமுதாய இயக்கம் எங்கள் இயக்கம்.

இப்படி எழுதுவதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்பதே கூடுதல் தகுதியுமாகும்.

தமிழ்நாட்டு மண்ணின் மனோபாவம் என்பது திராவிட இயக்கத்தை அப்படையாகக் கொண்டதே. 1971ல் ராமனை தேர்தல் பிரச்சினையாக்கி, காமராஜரும், ஆச்சாரியாரும் ஒருங்கிணைந்து நின்று திமுகவை எதிர்த்து தோல்வி அடைந்த சரித்திரம் என்ற பழைய சுவடுகளைக் கொண்ட மண் தமிழக மண்.

எனவே தேவையற்ற குழப்பத்தை விதைக்காமல் இருப்பதன் மூலமே, மதவாத சக்திகளை வீழ்த்த முடியும். மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன், கவலையுடன் நாம் கூறுகிறோம்.

மேலும், சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை பாதியில் கிடப்பில் போட்டால், அதற்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பெரும் விலையைக் கொடுக்க வேண்டி வரும் என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுவது நமது கசப்பான கடமையாகும்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங்கும் இதுபற்றி இணக்கமாக சிந்திக்க வேண்டும்.

அகில இந்திய தலைமை எடுக்க வேண்டிய ஒரு முக்கிய முடிவை இங்குள்ள பல் குழுவினரும் பலவகையில் பேசுவது, காங்கிரஸ் கட்சிக்கு பலத்தை ஊட்டாது; பலவீனப்படுத்தவே செய்யும்.

இன்றேல், மதவாத சக்திகளும், பிற்போக்கு சக்திகளும் இந்தியாவை அசல் இந்துத்துவா நாடாக ஆக்கிவிடும் அபாயம் தவிர்க்க முடியாது என வீரமணி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X