• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா

By Staff
|

Fidel in battle field
ஹவானா: கிட்டத்தட்ட 50 வருடம் ஆட்சியில் இருந்த கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பல ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள காஸ்ட்ரோ, கடந்த 2006ம் ஆண்டு தனது பொறுப்புகளை தனது சகோதரர் ரவுலிடம் தாற்காலிகமாக ஒப்படைத்திருந்தார்.

இந் நிலையில் இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராணுவத் தளபதி பொறுப்பில் இருந்தும் அவர் விலகியுள்ளார். கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான கிரான்மாவின் இன்டர்நெட் தளம் மூலம் இந்த செய்தியை காஸ்ட்ரோ இன்று வெளியிட்டார்.

81 வயதான காஸ்ட்ரோ பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குடல் அறுவை சிகிச்சையும் நடந்தது. அதன் பின்னர் அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். தொலைக்காட்சி மூலமாகத் தான் தனது கருத்துக்களை அவ்வப்போது மக்களுக்கு வெளியிட்டு வந்தார்.

1959ம் ஆண்டு புரட்சி மூலம் அதிகாரத்துக்கு வந்தவர் காஸ்ட்ரோ. தீவிர கம்யூனிஸ்டான இவரை ஒழித்துக் கட்ட அருகில் இருக்கும் நாடான அமெரிக்கா தலைகீழாக நின்று பார்த்தது. கிட்டத்தட்ட 10 அமெரிக்க அதிபர்கள் இவரது ஆட்சியை ஒழிக்க முயன்றனர்.

ஆனால், மக்கள் ஆதரவு இருந்ததால் ஆட்சியில் நீடித்தார். அதே நேரத்தில் இவரை கொல்லவும் சிஐஏ பல திட்டங்கள் போட்டது. அவற்றையும் முறியடித்தார் பிடல். 1961ம் ஆண்டில் கியூபாவுக்குள் தாக்குதலும் நடத்தி தோற்றது அமெரிக்கா.

1989ல் சோவியத் யூனியன் காலியானது முதல் கியூபா பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதையடுத்து காஸ்ட்ரோவை எளிதில் காலி செய்துவிடலாம் என அமெரிக்கா நினைத்தது. ஆனால், அதிலும் மண்ணை அள்ளிப் போட்ட காஸ்ட்ரோ, ஆட்சியில் நீடித்துக் காட்டினார்.

காஸ்ட்ரோ உடல் நலம் பாதிக்கப்பட்ட பின் அவரிடம் பாதுகாப்பு அமைச்சராக இருந்த அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ தாற்காலிகமாக அதிபரானார். இப்போது பிடல் பதவி விலகிவிட்டதால் ரவுலே முழு அதிகாரத்துடன் அதிபராக தொடரவுள்ளார்.

கியூபாவில் பிடல் ஆயுத போரட்டம் நடத்தியபோது அவருடன் கொரில்லா போரில் முழுமையாக பங்கேற்றவர் தான் ரவுல் என்பது குறிப்பிடத்தக்கது. நம் ஊர் மாதிரி திடீரென 'வளர்ப்பு மகன்' போல உதித்தவர் அல்ல.

ஆனாலும் பிடலுக்கு உள்ள கரிஸ்மா ரவுலுக்கு நிச்சயமாக இல்லை. இதனால் எத்தனை காலம் இவர் தாக்குப் பிடிப்பார் என்று தெரியவில்லை. அதே போல கியூபாவின் இளைய சமுதாயம் கம்யூனிஸத்தை அந்த அளவுக்கு விரும்பவில்லை. அண்டை நாடான அமெரிக்கா போல சுதந்திரமாய் வாழ ஆசைப்படும் இளம் கியூப மக்களின் ஆதரவைப் பெறாமல் ரவுல் காலம் தள்ளுவது கஷ்டம்.

கியூபாவில் எதற்கெடுத்தாலும் ரேசன், அங்கு எதுவுமே இல்லை என காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்கள் செய்யும பிரச்சாரம் ஒரு பக்கம் இருந்தாலும், நாட்டில் அனைத்து மக்களுக்கும் கல்வியையும், சிறந்த மருத்துவ சேவையையும் வழங்கியவர் காஸ்ட்ரோ என்பதை அனைவரும் ஒப்புக் ெகாள்கின்றனர்.

அதே நேரத்தில் தனி மனித சுதந்திரம், கருத்து சுதந்திரத்துக்கு காஸ்ட்ரோ இடமே தரவில்லை. ஒரே கட்சி தலைமையிலான அடக்குமுறை ஆட்சியையே கியூபா கடந்த 50 வருடமாக அனுபவித்து வருகிறது.

1959ல் அதிபர் புல்ஜென்சியோ பாடிஸ்டாவின் ஆட்சியை ஆயுதப் புரட்சி மூலம் காஸ்ட்ரோ கவிழ்த்தபோது பிடலை அங்கீகரித்த முதல் நாடு அமெரிக்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர் கம்யூனிஸ கொள்கைகளை பின்பற்றவே அவரை போட்டுத் தள்ளப் பார்த்தது. இதையடுத்து கியூபாவில் இருந்த அமெரிக்க நிறுவனங்களின் சொத்துக்களை எல்லாம் அரசுடமையாக்கிவிட்டு அமெரிக்கர்களை அடிக்காத குறையாக நாட்டைவிட்டு விரட்டினார் காஸ்ட்ரோ. பின்னர் சோவியத்துடன் நெருக்கமானார்.

ஆனால், பொருளாதரத் தடைகளைப் போட்டு கியூபாவை உண்டு இல்லை என ஆக்கியது அமெரிக்கா. இருந்தாலும் வெனிசுவேலா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள், சோவியத் யூனியன் ஆகியவற்றின் உதவியோடு தாக்குப் பிடித்தார் காஸ்ட்ேரா.

1962ல் சோவியத் யூனியன் தனது அணு ஏவுகணைகளை கியூபாவுக்கு கொண்டு வந்து அமெரிக்காவை குறி பார்த்து நிறுத்த, இதனால் அமெரிக்கா-சோவியத் இடையே அணு ஆயுதப் போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

அப்போதைய அமெரிக்க அதிபர் கென்னடியின் அணுகுமுறையால் அந்த போர் தவிர்க்கப்பட்டது.

ஆட்சியை விட்டு விலகும் பிடல் இந்தியாவுக்கு மிக நல்ல நண்பனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X