
2 நாட்களுக்கு வங்கிகள் ஸ்டிரைக்!
சென்னை: நாடு முழுவதும் நாளை முதல் 2 நாட்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரிகளும், ஊழியர்களும் வேலைநிறுத்தம் செய்கின்றனர். இதனால் வங்கிப் பணிகள் ஸ்தம்பித்து, பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும்.
சிறு சிறு வங்கிகளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கக் கூடாது, வங்கிப் பணிகளை அவுட்சோர்சிங் செய்யக் கூடாது, ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இயற்கையான முறையில் மரணமடையும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தர வேண்டும் என்ற கோரிக்ைககளை வலியுறுத்தி வருகின்றனர் வங்கி ஊழியர்கள்.
இதை வலியுறுத்தி சமீபத்தில் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் நாளை முதல் 2 நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதுதொடர்பாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி நாளை முதல் 2 நாட்களுக்கு வேலைநிறுத்தம் நடத்தப்படவுள்ளது.
வங்கிகள் எதுவும் நாளை இயங்காது. இதேபோல ஏடிஎம் மையங்களும் கூட நாளை இயங்காது. இதனால் பணம் எடுப்பதும், போடுவதும் 2 நாட்களுக்கு இயலாது.
இதனால் நாடு முழுவதும் வங்கிப் பணிகள் பெரும் ஸ்தம்பிப்பை சந்திக்கவுள்ளன. இன்றும் வங்கி விடுமுறை என்பதால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்திக்கவுள்ளனர்.