
ராமர் பால ஆதாரங்களை அழிக்க முயற்சி-அசோக் சிங்கால்

கோயம்புத்தூரில் நிருபர்களிடம் பேசிய அவர்,
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் வரும் 4,5ம் தேதிகளில் விஎச்பி ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தும்.
ராமர் பாலம் என்பது மனிதனால் கட்டப்பட்டதல்ல, அது இயற்கையாக உருவானது என்று அந்த மனுவில் மத்திய அரசு கூறியிருப்பதன் மூலம் ராமரே இல்லை என்று கூறியுள்ளனர்.
இந்துக்களுக்கு எதிராக போரை தொடுத்துள்ளது மத்திய அரசு. ராமர் பாலத்தைக் காப்பாற்ற கடைசி வரை போராடுவோம்.
நாங்கள் சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால், அதை வேறு பாதையில் அமைக்க வேண்டும் என்கிறோம் என்றார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது-தொகாடியா
இந் நிலையில் கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசிய விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா,
சேது சமுத்திரத் திட்டப் பிரச்சனை தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தொடர்ந்து சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
இதன் மூலம் ராமர் பாலத்தை இடிக்கும் செயலில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இது இந்துக்களை அவமதிப்பது போன்றது.
இதைப் பார்த்துக் கொண்டு இந்துக்கள் அமைதியாக இருக்கக் கூடாது. போராட்டம் நடத்த அவர்கள் ஆயத்தமாக வேண்டும். இந்துக்களை அவமதித்து நாட்டை ஆட்சி செய்ய யாரையும் அனுமதிக்க மாட்டோம்.
இதற்காக ராம ஜென்மபூமி போன்றதொரு போராட்டத்தை நடத்துவோம். இந்த போராட்டம் குறித்து இன்றும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். இதில் சாதுக்கள் தலைமையேற்று நடத்துவார்கள்.
இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும் கோருவோம். இது தொடர்பாக பாஜக கட்சித் தலைவர்கள் ராஜ்நாத் சிங், அத்வானி ஆகிய இருவரையும் இதுவரை நான் சந்தித்துப் பேசவில்லை.
இந்துக்களின் நம்பிக்கைக்கு சவால் விடுத்துள்ள காங்கிரஸ் அடுத்தத் தேர்தலில் ஆட்சிக்கு வரமுடியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை மதிக்கிறது. ஆனால் இந்துக்களின் உணர்வுகள் காயப்படுத்தப்படுகிறது.
சிறுபான்மையினருக்கு தனியாக நிதி ஒதுக்கியிருப்பதும், அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 280 வங்கிகளை திறக்க முடிவு செய்திருப்பதும் இனப் பிரச்சனையை தூண்டுவதாகும் என அவர் தெரிவித்துள்ளார் என்றார்.