105 வயது பாட்டிக்கு கனகாபிஷேகம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 105 வயது பாட்டிக்கு பேரன், பேத்திகள் உள்பட 195 பேர் கொண்ட உறவினர்கள் சேர்ந்து கனகாபிஷேகம் செய்தனர்.
கிருஷ்ணகிரி பழைய பேட்டையைச் சேர்ந்தவர் ராஜம்மா (105). இவரது கணவர் லட்சுமையா இறந்துவிட்டார். இவருக்கு 6 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மகன் வழி பேரன் வீட்டில் தற்போது வசித்து வருகிறார். இந்த பாட்டிக்கு பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேரன்கள், கொள்ளு பேத்திகள், எள்ளு பேரன்கள், எள்ளு பேத்திகள் என 195 உறவுகள் உள்ளனர்.
ராஜம்மாவின் வாரிசுகளில் சிலர் மத்திய மாநில அரசு பணிகளில் வேலை செய்கின்றனர். பலர் வியாபாரம் செய்து வருகின்றனர். ராஜம்மாவுக்கு நேற்று 106வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு ராஜம்மாவுக்கு அவரது வாரிசுகள் கனகாபிஷேகம் மற்றும் சதாபிஷேகம் நடத்தினர்.
பாட்டிக்கு புனித நீரால் அபிஷேகம் செய்தனர். பின்னர் அனைவரும் வரிசையில் நின்று ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.
ராஜம்மாவின் மகன் வழி பேரன் ராம்குமார் கூறுகையில், 'பாட்டி தன்னுடைய வேலைகளை அவரே செய்துக் கொள்வார். சைவ உணவுகளைதான் சாப்பிடுவார். பாட்டியின் 105வது பிறந்த நாளில் நாங்கள் ஒன்று கூடியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.