For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினியால் நல்லாட்சி தர முடியும்- சோ

By Staff
Google Oneindia Tamil News

Cho
சென்னை: இன்றைக்கு குஜராத் பசுமையாக இருக்கிறதென்றால் அதற்கு மோடியின் புத்திசாலித்தனமான, நேர்மையான அணுகுமுறைதான் காரணம். ரஜினி மனது வைத்தால் தமிழகமும் கூட அப்படியொரு (குஜராத் போல) மாநிலமாக மாற வாய்ப்பு இருக்கிறது என துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி கூறினார்.

தி நேம் ஈஸ் ரஜினிகாந்த் எனும் ரஜினி வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழாவில், நூலை வெளியிட்டு சோ பேசியதாவது:

இது ஒரு விநோதமான அதே நேரம் ரொம்ப விசேஷமான ஒரு விழா. ரஜினியின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை இதுவரை என் கண்ணில் காட்டவே இல்லை.

இந்த விழாவுக்கு வந்திருக்கும் சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன், ஏவி.எம். சரவணன், விழாவுக்கு வராத கமல்ஹாசன் என எல்லாரும் இந்த நூலைப் படித்திருக்கிறார்கள், என்னைத் தவிர. புத்தகத்தைப் படிக்காமலேயே அதை வெளியிட்டும் விட்டேன்!

ரஜினியைப் பொறுத்தவரை அவர் இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய 'ஷோமேன்' என்பதுதான் எல்லாருக்கும் தெரியும். ஆனால் உண்மையில் அவரைப் போன்ற எளிய மனிதரைப் பார்க்க முடியாது.

திரைத்துறையில் இருந்து கொண்டு எந்த பகட்டும் இல்லாமலிருக்கும் இப்படிப்பட்ட ஒரு சூப்பர் ஸ்டாரை எந்த நாட்டிலாவது பார்த்திருக்கிறீர்களா?

ரஜினியைப் புரிந்து கொள்வது கஷ்டம். யாராலும் விவரிக்க முடியாத, அதிசயங்களை உள்ளடக்கிய மனிதர் அவர். ரஜினி அரசியல் பேசுவார், என்னையும் உங்களையும் மற்றவர்களையும் விட நன்றாக அரசியலை அலசுவார், ஆனால் அவர் அரசியல்வாதி கிடையாது. அவர் ஆன்மீகம் பேசுவார், ஆனால் சந்நியாசி இல்லை.

இன்றைக்கு அவர் அளவுக்கு சினிமாவைத் தெரிந்தவர்கள் வெகு அரிது. ஆனால் அவர் முழுநேர சினிமாக்காரர் கூட கிடையாது! தன்னைச் சுற்றி வருகிற பாப்புலாரிட்டி, தனது நிஜ மதிப்பு எல்லாமும் தெரிந்தும் அமைதியாகவே இருக்கிற ஒரு அபூர்வ மனிதர் அவர்.

கடவுளின் அற்புதப் படைப்பு ரஜினி என்றால் ஒரு சதவிகிதம் கூட மிகையல்ல. கடவுளின் கட்டளைகளை முழுமையாக, சரியாக, நேர்மையாகப் பின்பற்றும் வெகு அரிதான மனிதர் அவர். உலகில் எத்தனைப் பேர் இத்தனை நல்ல குணங்களையும் ஒருசேரப் பெற்றிருக்கிறார்கள்? எனக்குத் தெரிந்து இன்றைக்கு அப்படி யாருமில்லை.

இன்றைக்கு எந்த நடிகராவது வருடத்தில் 15 நாட்கள் தன்னை முழுமையாக அடையாளம் காட்டிக் கொள்ளாமல் ரிஷிகேஷ் போன்ற ஒரு காட்டுப் பகுதியில், ஓட்ஸ் கஞ்சி குடித்தபடி காலத்தைக் கழிக்கத் தயாராக இருக்கிறார்களா... சொல்லிப் பாருங்கள், தலைதெறிக்க ஓடிப்போவார்கள்.

நான்கூட ஒரு முறை அவரிடம், ஏன் அடிக்கடி இப்படி ரிஷிகேஷ், இமயமலை என்று போய்விடுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், உங்களை மாதிரி ஆளுங்க முத்தைக் கொஞ்ச நாளாவது பார்க்காம இருக்கலாமேன்னுதான் என்றார் தமாஷாக.

நான்தான் ரஜினிக்கு ஆலோசகர் என்று பலரும் தப்பாக நினைத்துக் கொண்டு எழுதி வருகிறார்கள். என் ஆலோசனையைக் கேட்டிருந்தால் அவர் எப்படி இவ்வளவு பெரிய உயரத்துக்கு வந்திருக்க முடியும்! என் பேச்சைக் கேட்ட யார் உருப்பட்டிருக்கிறார்கள்? அவர் என் பேச்சை ஒன்று கூடக் கேட்கவில்லை. அதனால்தான் இவ்வளவு பெரிய வெற்றிகள் அவருக்குக் கிட்டியிருக்கின்றன.

அவர் செய்ததெல்லாம் கடின உழைப்பு, நேர்மையான முயற்சிகள் மட்டும்தான். அதற்கு கடவுள் அளித்த பரிசுதான் இத்தனை பெரிய இடம்.

'எந்த விஷயமாக இருந்தாலும் அடுத்தவரிடம் அதுகுறித்த கருத்துக்களைக் கேள்; தாமாகவே ஒரு முடிவை மேற்கொள்வதைவிட, கற்றறிந்த, அனுபவத்தில் சிறந்தவர்களின் ஆலோசனையைப் பெற்று ஒரு முடிவை மேற்கொள்வதுதான் புத்திசாலித்தனமானது. அப்படிச் செய்பவனே நல்ல நிர்வாகி' என்பது மகாபாரதம் அடிக்கடி வலியுறுத்தும் விஷயம்.

குஜராத்தில் நரேந்திர மோடி ஜெயித்தது கூட அப்படித்தான். இன்றைக்கு குஜராத் பசுமையாக இருக்கிறதென்றால் அதற்கு மோடியின் புத்திசாலித்தனமான, நேர்மையான அணுகுமுறைதான் காரணம்.

ரஜினி மனது வைத்தால் தமிழகமும் கூட அப்படியொரு (குஜராத் போல) பசுமையான மாநிலமாக மாற ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஏன், குஜராத்தைவிட ஒருபடி மேலே முன்னேறிவிடும், ரஜினியின் ஆட்சி அமைந்தால்.

குறையில்லாத மனிதர் ரஜினி. நியாய தர்மம் பார்ப்பவர், இரக்க சிந்தனை மிக்கவர். முக்கியமாக ஊழலற்ற, மனதில் வஞ்சம் வைத்துக்கொள்ளாத நல்லவர். ரஜினி மாதிரி நல்லவர்கள் ஆட்சி செய்தால்தான் இங்கே ஊழலற்ற நேர்மையான ஆட்சி நடக்கும். அவர் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

இந்தப் புத்தகத்தில் கூட அவர் அரசியலுக்கு வரப்போவது குறித்து ஏதோ சொல்லியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாராம் அதை எழுதிய பெண்மணி. அது கிடக்கட்டும்... உலக சரித்திரத்தில் முதல் முறையாக அனைத்து தரப்பு மக்களும் சேர்ந்து அரசியலுக்கு வா வா என்று எந்த நடிகரையாவது அழைத்திருக்கிறார்களா... ரஜினியை மட்டும்தான் இன்னமும் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காரணம் அவர் மீது அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு. அந்த நம்பிக்கை இன்னமும் அப்படியேதான் இருக்கு. மற்றதெல்லாம் ரஜினி கையில்தான் இருக்கு.

நாட்டை ஆளும் பிரதமர் அல்லது மாநிலத்தை ஆளும் முதல்வர் யாராக இருந்தாலும் தன்னைவிட பதவி உயர்வானது என்ற நினைப்பு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர் ரஜினி.

நல்லவரான ரஜினிக்கு பதவி மீதோ, பணத்தின் மீதோ எந்த ஆசைகளும் கிடையாது. கொஞ்சம் பணம், புகழ் வந்தால் சிலருக்கு தலைக் கனம் வந்துவிடும். ஆனால் இவ்வளவு பெரிய புகழ் வந்த பிறகும் ரஜினிக்கு தலைக்கனம் கிடையாது. இல்லாவிட்டால் சிவாஜி பட வெற்றியில் தன் பங்கு எதுவுமில்லை, அது ஷங்கர், சரவணனால் கிடைத்த வெற்றி என்று சொல்லுவாரா? அவர்களுக்காகவா அந்தப் படம் ஓடியது... தன் வெற்றியைக் கூட சொந்தம் கொண்டாட விரும்பாத மனிதர் அவர்.

அவரை முழுமையாகப் புரிந்து கொள்ள இந்தப் புத்தகம் உதவக் கூடும். கண்டிப்பாகப் படியுங்கள்...' என்றார் சோ.

முன்னதாக புத்தகத்தை சோ வெளியிட, ரஜினியின் இளைய மகளும் ஆக்கர் ஸ்டியோவின் நிர்வாக இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

ஏவிஎம் நிறுவன அதிபர் சரவணன், சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் ஆகியோரும் பேசினர்.

இயக்குநர்கள் பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமன், நடிகர்கள் சிவகுமார், விஜயகுமார், கார்த்தி உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

புத்தகத்தை எழுதிய டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் நன்றி கூறினார். ஓம் புக்ஸ் இண்டர்நேஷனல் எனும் நிறுவனம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X