தக்கலை கொலை முயற்சி: குற்றவாளி தலைமறைவு
மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளர்களை கார் ஏற்றிக் கொல்ல முயன்ற வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சரணடைந்த முக்கிய குற்றவாளி செந்தில்குமாரின் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் தக்கலையில் நெடுஞ்சாலைத் துறையினர் கோவில் ஆக்கிரமிப்பை அகற்றினர். அப்போது கோவில் தர்மகர்த்தாவின் குடும்பத்தினர் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களை கார் ஏற்றிக் கொல்ல முயன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காரை ஓட்டி வந்து பொறியாளர்கள் மற்றும் போலீஸார் மீது ஏற்றிய முக்கிய குற்றவாளி செந்தில்குமாருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சமீபத்தில் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
உயர்நீதிமன்ற நிபந்தனைப்படி அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். இந்த நிலையில் திருவட்டார் போலீஸார் உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.
அதில், காரை ஓட்டி வந்து கொல்ல முயற்சித்தவர் செந்தில்குமார். இவர்தான் வழக்கில் முக்கிய குற்றவாளி. அவருக்கு முன்ஜாமீன் கொடுக்கப்பட்டிருப்பதால் குமரி மாவட்டத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. எனவே முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாட்ஷா, முன்ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து செந்தில்குமார் தற்போது தலைமறைவாகி விட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செந்தில்குமாரைப் பிடிக்க டி.எஸ்.பி. பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கார் ஏற்றிக் கொல்ல முயன்ற வழக்கில் காவல்துறை படு மெத்தனமாக செயல்படுவதாகவும், குற்றவாளி தப்ப காவல்துறை மறைமுகமாக உதவி வருவதாக நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது.
--