பாமகவுக்கு சீட் தர இயலாது - கருணாநிதி திட்டவட்டம்
சென்னை: பாமகவுக்கு ராஜ்யசபா தேர்தலில் சீட் ஒதுக்க இயலாது என்பதை முதல்வர் கருணாநிதி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதையடுத்து பாமக அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ராஜ்யசபா தேர்தலில் பாமகவுக்கு கண்டிப்பாக ஒரு சீட் ஒதுக்க வேண்டும் என உறுதியாக கூறியுள்ளார் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இதுதொடர்பாக முடிவெடுக்க மார்ச் 15ம் தேதி வரை அவர் திமுகவுக்கு கெடுவும் விதித்துள்ளார்.
ஆனால் பாமகவுக்கு சீட் தர முடியாத நிலையில் இருப்பதாக முதல்வர் கருணாநிதி மீண்டும் விளக்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் கடந்த காலத்தில் திமுக தனது தோழமைக் கட்சிகளுக்கு ஆதரவு தந்து வாக்குகளை வழங்கி, அந்தக் கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த நிகழ்வுகளை 5.3.2008 தேதியிட்ட விளக்க அறிக்கையில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தேன்.
மாநிலங்களவை தேர்தலில் ஒருவர் வெற்றி பெற்றால் அவர் ஆறு ஆண்டு காலம் பதவி வகிக்க இயலும். இதன்படி 2004ம் ஆண்டில் மாநிலங்களவைத் தேர்தலில் நானும், பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாசும் கையெழுத்திட்டு செய்து கொண்ட உடன்பாட்டின்படி அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்று மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்.
அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலில் திமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் செய்து கொண்ட உடன்பாட்டின்படி திமுகவும், அதன் தோழமை கட்சிகளும் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் டி.ராஜாவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தோம்.
அதற்கடுத்து அதே 6 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலகட்டத்தில் இப்போது நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலை சந்திக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
உரிமையுடன் கேட்கும் காங்கிரஸ்:
2004ம் ஆண்டு பாமகவுக்கும், 2007ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துவிட்ட காரணத்தால், இப்போது சட்டப்பேரவையில் 35 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி இந்த காலகட்டத்தில் கூடுதல் வாய்ப்பை இப்போது உரிமையுடன் வலியுறுத்திய காரணத்தால், அக்கட்சிக்கு இத்தேர்தலில் ஆதரவு அளிப்பது திமுக மற்றும் தோழமை கட்சிகளின் நியாயமான கடமை என கருதப்படுகிறது.
எனவே மார்ச் 26ந் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் திமுக 2 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், மற்ற தோழமை கட்சிகளின் ஒத்துழைப்பை மேலும் உறுதிப்படுத்தி கொண்டு இந்த 6 ஆண்டு கால இடைவெளியில் இதுவரை வாய்ப்பு பெறாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5வது இடத்திலே போட்டியிடுகின்ற வாய்ப்பினையும் உருவாக்கலாம் என்று திமுக கருதுகிறது.
தோழமை கட்சிகளுக்கு வாய்ப்பே தராத கட்சி அல்ல திமுக. 96 இடங்களை கொண்டுள்ள திமுக மேலும் 6 வாக்குகளை மட்டுமே பெற்றால் சுலபமாக 3 இடங்களில் வெற்றி பெற முடியும் என்ற போதிலும், 2 இடங்களை மட்டுமே வைத்து கொண்டு, மேற்கொண்டு தன்னிடம் உள்ள 28 வாக்குகளை மற்றொரு தோழமை கட்சிக்கு வழங்கி கொண்டுவரும் வழக்கத்தை தொடர்ந்து இந்த முறையும் வரிசைப்படி பின்பற்றிட முன்வந்துள்ளது.
அந்த வரிசையில்தான் முதலில் பாமக, அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதற்கடுத்து இப்போது காங்கிரஸ், வாய்ப்பு இருந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்று ஒத்துழைப்பினை நல்கி வருகிறது. இந்த வரிசையில் பார்த்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்து மீண்டும் பாமகதான் இடம்பெறும்.
பாமகவிற்கு கூட தற்போது அக்கட்சியின் சார்பில் உறுப்பினராக உள்ள அன்புமணியின் பதவிக்காலம் முடியக் கூடிய சூழ்நிலை இருந்திருக்குமேயானால் அனைத்து தோழமை கட்சிகளையும் வலியுறுத்தி திமுகவும், தனது முழு ஆதரவை அளித்து அவரது வெற்றிக்குத்தான் பாடுபட்டிருக்கும்.
அப்படிப்பட்ட நெருக்கடி எதுவும் பாமகவுக்கு இப்போது இல்லை என்பதும், அவர்களது உறுப்பினர் இன்னும் 2 ஆண்டுகாலம் பதவியில் நீடிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார் என்பதுதான் உண்மை.
பாமகவுக்கு வாய்ப்பில்லை:
பாமகவுக்கு 2 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருக்கக் கூடாதா? என்று கூட ராமதாஸ் கேட்டுள்ளார். திமுக அப்படி ஒன்றும் நினைக்கவில்லை
தற்போது இந்த அணிக்கு உள்ள வாக்குகளின் அடிப்படையில் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் தோழமை கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாமக என்று 3 கட்சிகளும் ஒரே நேரத்தில் இருக்கும் இடங்களை பங்கிட்டு கொண்டு போட்டியிடுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.
எனவே ஆக்கப்பூர்வமான சிந்தனையோடு இதிலே ஒரு சுமூகமான முடிவெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
தற்போதைய நிலவரப்படி பாமவுக்கு சீட் கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகியுள்ளது. எனவே ராமதாஸ் தனது முடிவை மார்ச் 15ம் தேதி அறிவிப்பாரா அல்லது முன்கூட்டியே அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.